மனித இனத்தின் மாயை அகல்கிறது!

அறிவியல் சாதனையினால் வெல்ல முடியாத சவால்!

இதுவரை காலமும் உலகமயத்தின் அருமை பெருமைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த உலகம், இப்போதுதான் அதன் மறுபக்கத்தைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. உலகில் ஏதாவது ஒரு மூலையில் உள்ள நாட்டில் தடிமன் ஏற்பட்டால், உலகமே தும்மத் தொடங்கும் அவலத்தை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. சீனாவின் வூஹான் நகரில் உருவான நோய்த் தொற்று இப்போது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்றால் பொருளாதாரம் எதிர்கொள்ள இருக்கும் பாதிப்பை எதிர்கொள்வதற்காகத் தனது வட்டி வீதத்தை அமெரிக்காவின் பெடரல் வங்கி குறைத்திருக்கிறது. ஏற்கனவே 0.5% வட்டி வீதக் குறைப்பை அவுஸ்திரேலியா அறிவித்து விட்டது. ஜி-7 என்று அழைக்கப்படும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா அடங்கிய ஏழு நாடுகளும் அந்த அமைப்பின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, கொரோனா பாதிப்பு குறித்து விவாதித்திருக்கின்றன.

​கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்கு வராவிட்டால், எதிர்வரும் ஜூலை 24-ஆம் திகதி தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என்று ஜப்பானிய விளையாட்டுத் துறை அமைச்சர் ஷிக்கோ ஹாஷிமோட்டோ அறிவித்திருக்கிறார். சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடுகளாக இத்தாலியும், ஈரானும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஈரானில் இதுவரை 66 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 1,501 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுகிறார்கள்.

உலகம் இதுவரையில் கண்டிராத அளவிலான நோய்த்தொற்று என்று கொரோனாவை உலக சுகாதார நிறுவனம் அடையாளம் கண்டிருக்கிறது; உலகம் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த புதன்கிழமை முதல் ‘ட்விட்டர்’ நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தவாறு பணியாற்ற உத்தரவிட்டிருக்கிறது. தடிமனால் பாதிக்கப்பட்டிருக்கும் போப்பாண்டவர் கொரோனா நோய்த்தொற்றுக்காகப் பரிசோதனை மேற்கொண்டதாக இத்தாலியப் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருக்கிறது.

கொரோனா நோய்த் தொற்றுக்கு 77 நாடுகளைச் சேர்ந்த 94,166 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; 3,218 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது இப்போதைய புள்ளிவிவரம். நாளும் பொழுதும் இதன் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உலகை அச்சுறுத்திய ஸ்பானிஷ் காய்ச்சலில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அப்போது உலகம் உலகமயமாகவில்லை. இப்போது அப்படியில்லை.

ஒன்றை மட்டும் நாம் மறந்து விடலாகாது. மனித இனம் தனது விஞ்ஞான, நாகரிக வளர்ச்சியினால் இறுமாப்பு மிகுந்த மாயையில் சிக்கிக் கிடக்கிறது. ஆனாலும் மனித இனத்தினால் கொரோனா அச்சுறுத்தலை வெற்றி கொள்ள முடியாதிருக்கிறது. உயிரழிவுகளையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. நம்மால் வெல்ல முடியாத விடயங்களும் உள்ளன என்பதை உணர வேண்டிய தருணம் இது.


Add new comment

Or log in with...