பொதுத் தேர்தல் அறிவிப்பும் ஐ.தே.கவின் பலவீனமும்!

பாராளுமன்றம் நேற்றுமுன்தினம் (03.03.2020) கலைக்கப்பட்டுள்ளது. யாப்பு ரீதியில் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அத்தோடு பொதுத்தேர்தலுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான 2165/08 இலக்கம் கொண்ட வர்த்தமானி நேற்றுமுன்தினம் நள்ளிரவு வெளியானது.  

2019.11.16ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆணையைப் பெற்று ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்ல ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுத்தார். ஐ.தே.க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பொதுத்தேர்தலுக்கு செல்வதன் ஊடாக இவற்றுக்கு தெளிவான பதிலை மக்களின் ஆணையாகப் பெற்றுக் கொள்ளலாம். அந்தடிப்படையில் பாராளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வது நல்லது என்ற வகையில்தான் அழைப்பு விடுக்கப்பட்டது.  

ஆனால் ஐ.தே.க.வினர், 'இப்போதைக்கு பொதுத் தேர்தல் தேவையில்லை. பொதுத்தேர்தலுக்காகப் பாராளுமன்றத்தைக் கலைத்தால் 66 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும். அது நல்லதல்ல. அதனால் இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதியைப் பெற்றுக் கொள்ளும் காலம் நிறைவடையும் வரையும் , அதாவது 2020 ஓகஸ்ட் வரை பாராளுமன்றத்தைக் கொண்டு செல்வோம். அதுவரையும் பாராளுமன்றத்தைக் கலைக்க மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வழங்க முடியாது' என மறுத்தனர். இதன் விளைவாகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசாங்கமொன்றை அவர் உருவாக்கினார்.  

அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தின்படி, பாராளுமன்றமொன்றைக் கலைப்பதற்கான அதிகாரம் நாலரை வருடங்கள் நிறைவடையும் போது ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெறும். ஆனால் இத்திருத்தம் மேற்கொள்ளப்பட முன்னர் பாராளுமன்றமொன்றைக் கலைப்பதற்கான அதிகாரம் ஒருவருட நிறைவோடு ஜனாதிபதிக்கு கிடைத்து விடக் கூடியதாக இருந்தது.  

ஆயினும், 2015 ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தல் மூலம் பதவிக்கு வந்த ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கம் 19வது திருத்தத்தைக் கொண்டுவந்து அரசியலமைப்பில் பல திருத்தங்களை மேற்கொண்டது. அவற்றில் ஆறு வருட காலம் கொண்ட பாராளுமன்றமொன்றை ஒரு வருடம் நிறைவுற்றதும் கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதி பெற்றுக் கொள்ளும் முறையை நீக்கி நாலரை வருடங்கள் நிறைவில் அவ்வதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள கூடிய வகையில் திருத்தம் செய்தனர். இதன் விளைவாகவே பாராளுமன்றத்தின் பதவிக் காலம் நாலரை வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் அதனைக் கலைக்க முடியாத நிலையை ஜனாதிபதி எதிர்கொண்டார். நாலரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பதாயின் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம். அப்பெரும்பான்மையை வழங்கவே ஐ.தே.க மறுத்தது. அதனால் பாராளுமன்றத்தைக் கலைக்கத் தமக்கு அதிகாரம் கிடைக்கப் பெறும் வரை பொறுத்திருந்து அதனை கலைத்திருக்கின்றார் ஜனாதிபதி.  

இதன்படி 9 வது பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையும் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதோடு 9வது பாராளுமன்றம் மே மாம் 17ஆம் திகதி கூடும் எனவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த வகையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டியுள்ளன. இதன் நிமித்தம் கட்சிகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருவதோடு ஆசன ஒதுக்கீடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்படுகின்றது.  

இந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கட்சி பொதுத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான சகல வேலைத் திட்டங்களையும் பரந்த அடிப்படையில் முன்னெடுத்து வருகின்றது. இம்முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன பங்கீடு தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அதேநேரம் வேட்பாளர் தெரிவுக்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

ஆனால் ஐ.தே. க உட்கட்சி பூசலின் உச்சக்கட்டத்தை அடைந்து இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவராக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து நீடித்து வருகின்ற அதேநேரம், எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐ.தே.க யானை சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருக்கிறார். ஆனால் எதிர்க் கட்சி தலைவரான சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் புதிய அணியொன்றை உருவாக்கி ஐ.தே.கவில் ஏற்கனவே அங்கம் வகித்த சில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இதன் ஊடாக எதிர்வரும் பொதுத்தேர்தலை ஐ.தே.க இரண்டாகப் பிரிந்து நின்று எதிர்கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளதாக அவதானிகள் தெரிவித்திருக்கின்றனர்.  

எட்டு தசாப்த வரலாற்றைக் கொண்ட இக்கட்சியில் தோற்றம் பெற்றுள்ள உட்கட்சி மோதல் மற்றும் முரண்பாடுகள் எதுவும் நாட்டையோ மக்களையோ முன்னிலைப்படுத்தியதாக இல்லை. அவை தங்களை முன்னிலைப்படுத்திய செயற்பாடுகளே அன்றி வேறில்லை. அதனால் இக்கட்சியின் இரண்டு அணியினர் தொடர்பிலும் மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். அவர்களது செயற்பாடுகள் குறித்து வெறுப்படைந்துள்ளனர்.  

ஆகவே நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்படும் நம்பிக்கைக்குரிய அணியாக ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கட்சி-யையே மக்கள் கருதுகின்றனர். இக்கட்சியின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் பயனாக இப்பொதுத்தேர்தல் தொடர்பில் இம்முன்னணி கொண்டுள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை இலக்கை இலகுவாக அடைந்து கொள்ளும். அது நாட்டின் நிலைவேறான அபிவிருத்திக்கும் சுபீட்சத்திற்கும் அடித்தளமாக அமையும்.


Add new comment

Or log in with...