இலங்கைக்கு பலம் சேர்க்கும் பிரதமரின் இந்திய விஜயம்

சுதந்திர இலங்கையின் 24 வது பிரதமராக கடந்த நவம்பர் மாதம் (2019) பதவியேற்றுக்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜக்ஷ தமது முதலாவது வெளிநாட்டு இராஜதந்திர விஜயத்தை தற்போது இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ளார்.

2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் பெரும்பாலான மக்களின் ஆணையைப் பெற்று நிறைவேற்றதிகாரம் கொண்ட 7வது ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தமது முதலாவது வெளிநாட்டு இராஜதந்திர விஜயத்தை கடந்த நவம்பரில் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்தார். அவ்விஜயத்துக்கும் இரு நாடுகளது நட்புறவுக்கும் மேலும் பலம் சேர்க்கும் வகையில் பிரதமரின் இவ்விஜயம் அமைந்திருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

'அயல் நாட்டுக்கு முதலிடம்' என்ற ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்துக்கும் இவ்விஜயம் பலம்சேர்த்துள்ளது. நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த வெள்ளியன்று புதுடில்லி சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்க், ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார்.

இப்பேச்சுவார்த்தைகளின் போது, பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக மேம்பாடு, கலாசார மற்றும் சமூகத்துறைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தையின் போது 'பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும். இரு நாடுகளுக்கும் பயங்கரவாதம் பொதுவான பிரச்சினையாகும். அதனால் இதற்கெதிரான போரில் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும்' என அவர் உறுதியளித்தார்.

அந்த வகையில் இலங்கை, இந்தியா உட்பட முழு உலகுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்துக்கு தக்க பதிலடி கொடுத்து பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் கூட்டிணைந்து செயற்படுவதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பிராந்திய அரசியலில் முக்கியத்துமிக்க காலகட்டத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் இவ்விணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இது நாடுகள் மட்டத்தில் மாத்திரமல்லாமல் பிராந்தியத்திலும் வரவேற்கப்படும் ஒரு விடயமாக விளங்குகின்றது.

உண்மையில், பயங்கரவாதம் எந்த வடிவிலும் வெளிப்பட இடமளிக்கப்படக்கூடாத ஒரு செயற்பாடாகும். அதற்கு வழிவகுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுவது அவசியம். ஏனெனில் உலக அமைதிக்கும் மனிதர்களின் ஒற்றுமை சமாதானத்துக்கும் பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாகும். பயங்கரவாதம் காரணமாக உலகின் பல நாடுகள் பாதுகாப்பு ரீதியாக மாத்திரமல்லாமல் சமூக, பொருளாதார ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டும் பின்னடைவுகளுக்கு உள்ளாகியும் உள்ளன. இதற்கான அனுபவங்களைப் பல நாடுகள் கொண்டுள்ளன.

அந்த வகையில், இலங்கை சுமார் மூன்று தசாப்த காலப் பயங்கரவாதத்திற்கு ஏற்கனவே முகம் கொடுத்திருக்கின்றது. அதனால் இந்நாடும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்பயங்கரவாதம் இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் அன்றைய ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒழித்துக் கட்டப்பட்டு நாட்டில் அமைதி தோற்றுவிக்கப்பட்டது.

என்றாலும், கடந்த 2019 ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று எவரும் எதிர்பாராத நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலால் இந்நாட்டின் அப்பாவி மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடல்லாமல் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியது.

இருப்பினும் பயங்கரவாதம் எந்த வடிவிலும் தலைதூக்குவதற்கு இடமளிக்காத வகையில் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த சூழலில் இந்தியப் பிரதமர் அளித்திருக்கும் உறுதிமொழி இந்நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்தப் பக்கபலமாக அமையும். அதேநேரம், இரு நாடுகளது தலைவர்களும் வெளிப்படுத்தி இருக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான இணக்கப்பாடு இரு நாடுகளுக்கும் மாத்திரமல்லாமல் பிராந்தியத்திலும் அமைதி சமாதானத்தை பாதுகாக்க வழிவகுக்கும் என்பதுதான் மக்களது கருத்தாக உள்ளது.

வரலாற்றுக் காலந்தொட்டே இலங்கையும், இந்தியாவும் மிக நெருங்கிய நட்பு நாடுகளாக விளங்கி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையிலும் பொதுவான பிணைப்பு உள்ளது. அதனால் பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் கூட்டாக செயற்படுவது அர்த்தபூர்வமான செயற்பாடாக அமையும்.

அதேநேரம் பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக மேம்பாடு, கலாசார மற்றும் சமூக விடயங்கள் குறித்தும் பிரதமரின் இவ்விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றன. இவையும் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கக்கூடியதாகவே இருக்கும்.

ஆகவே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் இலங்கைக்கு பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்புக்கு மாத்திரமல்லாமல் பொருளாதார, வர்த்தக மற்றும் கலாசார உறவுகளின் மேம்பாட்டிற்கும் மேலும் பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.


Add new comment

Or log in with...