Saturday, April 27, 2024
Home » தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவின் அக்கறை அவசியம்

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவின் அக்கறை அவசியம்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

by damith
February 13, 2024 8:15 am 0 comment

தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கவும் மற்றும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் கடந்த வௌ்ளிக்கிழமை (09) எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது;

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இதனால், தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தைத் தவிர்த்து, கடந்த சில ஆண்டுகளில் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வரும் மீன்பிடிப் பகுதிகள் இலங்கைக் கடற்படையினரால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டுமன்றி மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ள அவர்களின் கலாசார மற்றும் சமூகக் கட்டமைப்புக்கு பெருத்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டில், இலங்கைக் கடற்படையினர் 243 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதுடன், 37 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 28 நாட்களில் மட்டும், 6 சம்பவங்களில், 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 12 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளை அரசுடமையாக்க இலங்கை அரசாங்கத்துக்கு அதிகாரமளிக்கும் வகையில், 2018-ம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தினால் கடல்சார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பாக, முன்னரே, சுட்டிக்காட்டியிருந்தேன். இலங்கை அரசின் இந்நடவடிக்கையால், நல்ல நிலையில் உள்ள, பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்டு, தமிழகத்துக்குக் கொண்டு வர முடியாதுள்ளது.

எனவே, பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப் பட்டுள்ள இந்திய மீன்பிடிப் படகுகளைத் திரும்பப் பெற்றிடவும், படகுகளை உடனடியாக விடுவித்திடவும் ஏதுவாக, மேற்படி சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டும். இவ்வாறு தமிழக முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT