“கடவுள் நன்றியையும் புகழ்ச்சியையும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றார்” | தினகரன்


“கடவுள் நன்றியையும் புகழ்ச்சியையும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றார்”

இயேசுவுக்கு என்ன பிடிக்கும் என்பதை கடந்த ஞாயிறு நற்செய்தி சுட்டிக்காட்டுகின்றது. இயேசுவுக்கு நன்றி பிடிக்கும் (லூக் 17:16), புகழ்ச்சி பிடிக்கும் (லூக் 17:18). இவ்வாறு இயேசு நன்றியையும் புகழ்ச்சியையும் நம்மிடமிருந்து எதிர்ப்பார்ப்பதற்குக் காரணம் உண்டு.

 நன்றி சொல்பவர்களையும், தன்னைப் புகழ்கின்றவர்களையும் கடவுள் வரலாற்றிலே வாழ்வாங்கு வாழவைத்திருக்கின்றார். நாம் இறைவனிடமிருந்து எழில்மிகு வரங்களைப் பெற்று வளமுடன் வாழ இறைவனுக்கு நன்றி கூறி  இறைவனைப் புகழ்ந்து வாழ இயேசு நம்மை அழைக்கின்றார்.

பழைய ஏற்பாட்டில் செங்கடலைக் கடந்த பிறகு மோசேயும் அவருடைய மக்களும் கடவுளுக்கு நன்றி கூறி அவரைப் புகழ்ந்து பாடினர் (விப 15:1-21). அவ்வாறு நன்றி சொல்லி புகழ்ந்த மோசேயைக் கடவுள் வரலாற்றில் உயர்த்தி வளமுடன் வாழவைத்தார்.

 புதிய ஏற்பாட்டில் திருச்சபையின் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் நடுவிலே இல்லை என்ற சொல்லே இல்லாமல் இறைவன் பார்த்துக்கொண்டார். காரணம் அவர்கள் ஒவ்வொரு நாளும் அப்பத்தைப் பிட்டு கடவுளைப் போற்றி வந்தார்கள் (திப 2:46-47).

 இறைவனிடமிருந்து நாம் பெற்ற நன்மைகளை நினைத்துப் பார்த்தால் அங்கே நன்றி மன்றாட்டுப் பிறக்கும். இறைவனுடைய இணையில்லா அன்பையும் ஆற்றலையும் நினைத்துப் பார்த்தால் அங்கே புகழ்ச்சி மன்றாட்டு பிறக்கும். இந்த இருவகையான மன்றாட்டுக்களுக்கும் தாயாக விளங்குவது நம்பிக்கை.

 இறைவன் ஒருவர் இருக்கின்றார். அவர் அன்பே உருவானவர். அவர் ஆற்றல் மிக்கவர்.

அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளாத எதுவும் என்னிடமில்லை என்று  சொல்வதை வாழ்ந்து காட்ட விரும்புகின்றவர்கள் மட்டுமே இறைவனுக்கு நன்றி சொல்வர். இறைவனைப் புகழ்வர்.

 நன்றி சொல்பவர்களும் புகழ்கின்றவர்களும் கடவுளை நம்பி வாழ்வதால் அவரை நம்புகின்றவர்களை இறைவன் கைவிடுவதில்லை. இதனால் தான் புனித பவுலடிகளார்  நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் (எபே 5:20) என்றும் எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள் (1தெச 5:18) என்றும் கூறுகின்றார்.

எபிரேயருக்கு எழுதியுள்ள திருமுகம் எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக (எபி 13:15அ) எனக் கூறுகின்றது.

சிறு சந்தேகம் நமக்கு ஏற்படலாம். எமக்கு ஏற்படும் இழப்புகளுக்காகக் கூட கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? இந்தக் கேள்விக்கு ஒரு வாக்கியக் கதை ஒன்று பதில் சொல்லும்.:

தவமிருந்து பெற்ற தன் முதல் குழந்தை இறந்தாலும் அந்தப் பெண் தனக்குத் தாய்மையை அளித்த கடவுளுக்கு நன்றி சொன்னாள். நம்மை ஒருபோதும் மறுதலிக்க விரும்பாத (2திமொ 2:13) இறைவனுக்கு இன்ப நேரத்தில், நலம் பெற்ற நாமானைப் போலவும், துன்பநேரத்தில் கதையில் வந்த பெண்ணைப் போலவும் நன்றி கலந்த புகழ்ச்சி மன்றாட்டை சமர்ப்பித்து அவரின் நிறையாசிகளைப் பெற்று வளமுடன் வாழ்வோம்.         

ஆயர் பேரருட்திரு
அந்தோனிசாமி


Add new comment

Or log in with...