Saturday, April 27, 2024
Home » சரித்திரப் பிரசித்தி பெற்ற பேருவளை புஹாரி தக்கியாவில் தமாம் மஜ்லிஸ்

சரித்திரப் பிரசித்தி பெற்ற பேருவளை புஹாரி தக்கியாவில் தமாம் மஜ்லிஸ்

by sachintha
February 9, 2024 8:37 am 0 comment

சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை, மாளிகாச்சேனை பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புஹாரித் தக்கியாவில் 145ஆவது வருட புனித ஸஹீஹுல் புஹாரி தமாம் மஜ்லிஸ் எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் அல் ஆலிமுல் பாழில் சங்கைக்குரிய அஷ்செய்கு அஹம்மத் பின் முஹம்மத் ஆலிம் காதிரியதுன் நபவி தலைமையில் நடைபெறுகிறது.

இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தங்களது வரலாற்றுப் புகழ்மிக்க இறுதி ஹஜ்ஜின் (ஹஜ்ஜதுல் விதாவின்) போது அங்கே குழுமிருந்த அருமைத் தோழர்கள் மத்தியில் உரையாற்றும் போது இதைச் சொன்னார். ‘உங்களுக்காக நான் இரண்டை விட்டுச்செல்கிறேன். அவற்றைப் பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். இறைவேதமாம் புனித அல்குர்ஆனும் அண்ணலாரது நடைமுறைகளாகிய சுன்னாவுமே அவை இரண்டுமாகும்.

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஹதீஸ் விளக்கங்களைத் தொகுத்துப் பாதுகாக்கவேண்டும் என்ற உண்மை உணரப்படவில்லை. நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருந்த காரணத்தினால் அன்று மக்கள் மத்தியில் எழுந்த பிரச்சினைகளுக்கு அவரே விளக்கமளித்துக் கொண்டிருந்தார். ஆனால் நபி (ஸல்) அவர்களின் வபாத்துக்குப் பின்னர் ஹதீஸ்களின் முக்கியத்துவம் உணரப்பட்டன. புனித அல்குர்ஆனை தெளிவாக விளங்கிக் கொள்ளவும், இஸ்லாமிய திட்டங்களை நன்கு அறிந்துகொள்ளவும் ஹதீஸ்கள் தேவைப்பட்டன. இதனால் காலக் கிரமத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழித் தொகுப்புக்கள் வெளிவர ஏதுவாயின. இவற்றுள் தலையாயதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுவது ‘புனித ஸஹீஹுல் புகாரி’ எனும் ஹதீஸ் பேழையாகும்.

அபூ அப்தில்லாஹ் முஹம்மதிப்னு இஸ்மாயீல் புஹாரி (ரஹ்) அவர்களால் தொகுக்கப்பட்ட மேற்படி நூல் அல்குர்ஆனுக்கு அடுத்தபடியாக சிரமேற்கொண்டு கருதப்பட்டு போற்றப்படுகிறது. இறுதித்தூதர் நபி (ஸல்) அவர்களின் வாய்வந்த இலட்சக்கணக்கான ஹதீஸ்களைத் தொகுத்து, 7275 ஹதீஸ்களை மட்டுமே இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் தமது ஸஹீஹுல் புகாரி கிரந்தத்தில் எழுதியுள்ளார். மேற்படி புகாரிக் கிரந்தம் பாராயணம் செய்யப்பட்டு விளங்கப்படுத்தும் மஜ்லிஸ்கள் உலகின் நாலா பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றன. எமது நாட்டிலும் பல இடங்களில் இந்த புனித கிரந்தம் வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்,செயல், அங்கீகாரம் அடங்கிய புனித புகாரி கிரந்தத்தை வாசித்து நபிகளாரின் உயரிய வாழ்க்கை முறையை அறிந்து கொள்வதற்கும் அதன்படி எமது வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் புனித புஹாரி கிரந்தம் எமக்கு பேருதவி புரிகின்றன.

இந்த அடிப்படையில் சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை, மாளிகாச்சேனையில் அமைந்துள்ள பைதுல் முபாரக் முஸ்தபவிய்யா புஹாரித் தக்கியாவில் இற்றைக்கு 144வருடங்களுக்கு முன்னர் (ஹிஜ்ரத் ஆண்டு 1301 ஜமாதுல் ஆகிர் மாதம் பிறை 27ல்) ஆரம்பம் செய்யப்பட்ட புகாரி மஜ்லிஸ் அல்லாஹ்வின் கிருபையால் ஒரு நூற்றாண்டைத் தாண்டிச் சென்றாலும், அன்று முதல் இன்றுவரை மாற்றங்கள், நூதனங்கள் எதுவுமின்றி அதன் சரத்துக்களைப் பேணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருடாந்தம் மூன்று பிறைகள் அடங்கிய ஜமாதுல் ஆகிர் மாதம் தொடங்கி ரஜப் மாதம் முழுமையாக நடைபெற்று சஹ்பான் மாதம் முதல் பகுதியில் முடிவடைவது விஷேட அம்சமாகும்.

18ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட மாளிகாச்சேனை புகாரித் தக்கியா இலங்கையில் வரலாற்று முக்கியத்துவம்மிக்கதோர் தைக்கியாவாகஉள்ளது. அதன் ஆரம்ப அமைப்பிலே தக்கியா இருக்கின்றபோதிலும் தற்போது இடவசதி கருதி விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. அன்றுவைத்த சட்டதிட்டங்கள் இன்றும் எவ்விதமான மாற்றமும் இன்றி அப்படியே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஹிஜ்ரி 1301 ஜமாத்துல் ஆகிர் மாதம் பிறை 27ல் அதிகாலை சுபஹ் தொழுகையை முடித்தஅதே இருப்பில் பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புகாரித் தக்கியாவில் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் உத்தரவுப்படி தென் அரேபிய எமன் நாட்டைச் சேர்ந்த சங்கைக்குரிய நாயகம் சேகுஅப்துர் ரஹ்மான் இப்னு ஹஸன் இப்னு அப்துல் பாரி அஹ்தலி மௌலானா என்ற பெரியார் புனித ஸஹீஹூல் புஹாரி கிரந்தத்தை தனது கையில் எடுத்து ஆரம்பப் பகுதியை பாராயணம் செய்தார். தனது வலப்பத்தில் அமர்ந்திருந்த அரபுத் தமிழ் யுகதந்தை எனப் போற்றப்படும் மகான் சங்கைக்குரிய சேகு முஸ்தபா வலியுல்லாஹ்விடம் புனித புஹாரி கிரந்தத்தைக் கையளித்து இதனை ஒவ்வொரு வருடமும் (வெள்ளிக்கிழமை தவிர) 30 நாட்கள் பாராயணம் செய்து வரும்படி பணித்தார்.

மாகாண் சேகு முஸ்தபா (றஹ்) அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு புனித பேருவளை நகரிலிருந்துதான் ஆரம்பமானது என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ மாட்டார்கள். இந்த பேருவளை நகரில் மூத்தகுடியில் ஆதம் மரைக்காரின் புதல்வரான சங்கைக்குரிய மாகான் சேகு முஸ்தபாவலியுல்லாஹ் பிறந்தார்கள்.

இந்தநாட்டின் சமய வரலாற்றில் அன்னார் ஓர் உயர்ந்த ஸ்தானத்தை பிடித்துக்கொண்டார். அன்னார் இஸ்லாமியசட்ட திட்டங்கள் அரபு இலக்கண, இலக்கிய, பிக்ஹூ சட்டதிட்டங்கள் போன்ற இஸ்லாமிய மத அறிவியல் துறையில் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார். இந்தியாவில் உள்ள காயல்பட்டணத்தில் இத்துறையில் அறிவுபெற்று நாடு திரும்பி பேருவளை மாளிகாசேனை பைத்துல் முபாரக் முஸ்தபவியா புகாரித் தக்கியாவை தனது தலைமை ஸ்தானமாகவும் ஆய்வுகூடமாகவும் அமைத்து இஸ்லாமிய பணிபுரியும் காலத்தில் சங்கைக்குரிய முபாரக் மௌலானாஎன்ற பெரியாரின் சகவாசம் கிடைத்தது.

சங்கைக்குரிய செய்கு முஸ்தபா (றஹ்) அவர்களின் சேவைக்கு இவர்கள் துணைபுரிந்து சிறிது காலத்தில் முபாரக் மௌலானா தென்னிலங்கையில் காலி நகரில் இறையடி சேரவே தென் அரேபியர் யெமன் நாட்டைச் சேர்ந்த அஹ்தலி மௌலானா அவர்களின் சகவாசம் கிடைத்து பேருவளை மாளிகாச்சேனை புஹாரித் தக்கியாவில் புஹாரி மஜ்லிஸ் ஆரம்பம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. சேகு முஸ்தபா (றஹ்) அவர்களினால்

அறிமுகப்படுத்திய காதிரியதுன் நபவிய்யா முஸ்தபவிய்யா எனும் ஆத்மஞானவழி (தரீக்கா) இன்றும் இலங்கையின் சுமார் இருபது ஊர்களில் பின்பற்றப்பட்டு வருவது சுன்னத் ஜமாத் கொள்கைகளுக்கு உயிரூட்டக்கூடிய விடயமாகும்.

புனித புகாரி மஜ்லிஸை ஹிஜ்ரி 1301 முதல் 1304 வரை சங்கைக்குரிய சேகுநாயகம் சேகு முஸ்தபா (றஹ்) அவர்கள் நடாத்தினார். பின்னர் அவர் மைந்தர் சங்கைக்குரிய சேகுநாயகம் முஹம்மத் ஹாஜியார் ஆலிம் அவர்கள் ஹிஜ்ரி 1304 முதல் 1331 வரை நடாத்தினார். அவருக்குப் பின்னர் அவரது மைந்தர் சங்கைக்குரிய சேகுநாயகம் அப்துல் சமீம் ஆலிம் அவர்கள் ஹிஜ்ரி 1331 முதல் 1391 வரை தலைமைதாங்கி நடாத்தினார். அதனைத் தொடர்ந்து அவரது மைந்தர் சங்கைக்குரியசேகுமுஹம்மத் நூர் ஆலிம் அவர்கள் ஹிஜ்ரி 1391 முதல் 1411 வரைநடாத்தினார். அன்னார் இறையடி சேர்ந்த பின்னார் அவரதுமைந்தர் சங்கைக்குரிய சேகு அஹமது ஆலிம் அவர்கள் ஹிஜ்ரி 1412 முதல் இன்றுவரை மிகச் சிறப்பாக தலைமை தாங்கி நடாத்தி வருகிறார். சங்கைக்குரிய சேகு முஸ்தபாநாயகத்தின் குடும்பத்தைச் சேர்ந்தபரம்பரையினர் புனித புகாரி மஜ்லிஸை புஹாரித் தக்கியாவில் சிறப்பாக நடாத்தி வருவது அல்லாஹ்வின் கிருபையும் நபி (ஸல்) அவர்களின் திருப்பொருத்தமும் என்றே கூற வேண்டும்.

புனித மஜ்லிஸ் எதிர்காலத்திலும் மிகச் சிறப்பாகநடைபெற அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT