Home » காசாவில் போர் நிறுத்த முயற்சியாக பிளிங்கன் மீண்டும் பிராந்தியம் விரைவு

காசாவில் போர் நிறுத்த முயற்சியாக பிளிங்கன் மீண்டும் பிராந்தியம் விரைவு

உடன்பாடு எட்டுவதில் தொடர்ந்தும் இழுபறி

by damith
February 6, 2024 8:17 am 0 comment

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இந்தப் போர் வெடித்ததில் இருந்து ஐந்தாவது முறையாகவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் மத்திய கிழக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அவர் சவூதி அரேபியா, இஸ்ரேல், எகிப்து மற்றும் கட்டார் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

காசா போர் நான்காவது மாதத்தை எட்டும் நிலையில் அந்த முற்றுகை பகுதியில் ஏற்பட்டிருக்கும் பாரிய மனிதாபிமான நெருக்கடி குறித்து உதவிக் குழுக்கள் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வரும் நிலையிலேயே இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

“தற்போதைய நிலைமையை விபரிக்க முடியாதுள்ளது” என்று எகிப்து எல்லையை ஒட்டிய தெற்கு காசாவின் ரபாவுக்கு தப்பி வந்த பலஸ்தீனர் ஒருவரான ஹமூதா என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய தாக்குதல்களால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்திருக்கும் ரபாவில் தற்போது காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர். அந்தப் பகுதியை ‘பிரஷர் குக்கர்’ அடுப்பாக ஐ.நா விபரித்துள்ளது.

“உங்களிடம் மில்லியன் டெலர்கள் இருந்தாலும் சரி நூறு டொலர்கள் இருந்தாலும் சரி அனைவரும் ஒரே நிலைமையையே எதிர்கொள்கிறார்கள்” என்று ஹமூதா குறிப்பிட்டார்.

கடந்த வார இறுதியில் இஸ்ரேலியப் படை மேலும் தெற்காக எல்லை நகரை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளது. இது அந்தத் தரைப்படை ரபா நகரை நோக்கி வரும் அச்சத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கிழக்கு ரபா மற்றும் தெற்கு காசாவின் பிரதான நகரான கான் யூனிஸில் நேற்று (05) பீரங்கி தாக்குதல்கள் இடம்பெறும் சத்தம் கேட்பதாக அங்கிருப்பவர்களை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் போரைத் தூண்டிய கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதிய இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கான திட்டம் கான் யூனிஸ் நகரில் இருந்து வகுக்கப்பட்டதாகவும் இந்த நகரிலேயே ஹமாஸ் உயர் அதிகாரிகள் ஒளிந்திருப்பதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் திங்கட்கிழமை வரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட குறைந்தது 128 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய காசாவில் டெயிர் அல் பலாஹ் நகரின் குடியிருப்புகள் மீது நடத்திய தாக்குதல்களில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனைகளுக்கு அருகாமை பகுதிகள் உட்பட காசாவின் மத்திய மற்றும் தெற்கு முனைகளில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டுகளை வீசி வருவதாக ஹமாஸ் அரச ஊடக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

உடன்பாடு இல்லை

கடந்த ஜனவரியில் பாரிஸில் இடம்பெற்ற அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து மற்றும் கட்டார் அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் வரையப்பட்ட போர் நிறுத்த முன்மொழிவு குறித்து, தற்போது பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்தியம் எங்கும் ஈராக் ஆதரவு போராட்டக் குழுக்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக தாக்குதல்களை நடத்துவதோடு. அமெரிக்காவின் பதில் தாக்குதல்கள் தீவிரம் அடைந்து பிராந்தியம் எங்கும் போர் சூழல் உச்சம் பெற்றிருக்கும் நிலையில் இராஜதந்திர முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டிருக்கும் இந்தப் போர் நிறுத்தத்தின்படி ஆரம்பத்தில் ஆறு வாரங்கள் சண்டை நிறுத்தப்பட்டு ஹமாஸின் பிடியில் இருக்கும் பணயக்கைதிகள் மற்றும் இஸ்ரேலிய சிறையில் உள்ள பலஸ்தீனர்களுக்கு இடையிலான கைதிகள் பரிமாற்றம் ஒன்றுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனினும் உடன்பாடு ஒன்று இன்னும் எட்டப்படவில்லை என்று ஹமாஸ் தெரிவித்திருக்கும் அதே நேரம், இஸ்ரேலிய அதிகாரிகள் சிலர் உடன்படிக்கைக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். பலஸ்தீன போராளிகளால் பிடிக்கப்பட்ட சுமார் 250 இஸ்ரேலிய பணயக்கைதிகளில் தொடர்ந்தும் 132 பேர் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதில் கொல்லப்பட்டதாக நம்பப்படும் 27 பேரும் அடங்குவர்.

இஸ்ரேல் கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக காசா மீது நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களே அதிகமாக உள்ளனர்.

காசா மோசமான மனிதாபிமான நிலையை எதிர்கொண்டிருப்பதாக எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டிருக்கும் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம், “இடைவிடாத குண்டு தாக்குதலுக்கு மத்தியில் சுத்தமான நீர் மற்றும் துப்புரவேற்பாடுகளை பெறுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றது.

பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் 12 ஊழியர்கள் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அமெரிக்கா தலைமையிலான ஒரு டஜனுக்கு மேற்பட்ட நாடுகள் இந்த ஐ.நா நிறுவனத்திற்கான நிதியை இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிதி இடைநிறுத்தப்பட்டிருப்பது காசாவில் பெரும் பட்டினி மற்றும் நோய் பரவலை எதிர்கொண்டிருக்கும் 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான முக்கிய உதவிகளை வழங்கும் ஐ.நா நிறுவனத்தின் இருப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு கொள்கை தலைவர் ஜோசப் பெரல் எச்சரித்துள்ளார்.

இந்த நிறுவத்தின் செயற்பாடுகளில் தனிக்கை செய்யவிருப்பதாக ஐ.நா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மனிதாபிமான நெருக்கடி

பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் முன்னர் கருத்து வெளியிட்ட பிளிங்கன், மனிதாபிமான நெருக்கடி தமது கவனத்தில் இருக்கும் ஒன்றாக அமையும் என்றார்.

“காசாவில் மனிதாபிமான தேவைகளை அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டி உள்ளது என்பதோடு மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது தொடர்பிலும் சவூதியுடனான பேச்சுவார்த்தையில் நாம் முன்னுரிமை அளிக்கவுள்ளோம்” என்று பிளிங்கன் குறிப்பிட்டார்.

இந்தப் போருக்கு முன்னர் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்துவதில் சவூதி அவதானம் செலுத்தி வந்தது. கடந்த ஜனவரியில் சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானுடன் பேசிய பிளிங்கன், இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்துவதில் அவர் தொடர்ந்தும் ஆர்வத்தை வெளிப்படுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் கிவிர், வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இஸ்ரேலிய நெருங்கிய நட்பு நாடு போதுமான ஆதரவை தருவதில்லை என்று குறை கூறிய நிலையிலேயே பிளிங்கனின் பிராந்திய விஜயம் இடம்பெற்றுள்ளது.

“எங்களுக்கு முழு ஆதரவை வழங்குவதற்கு பதிலாக, (அமெரிக்க ஜனாதிபதி ஜோ) பைடன் மனிதாபிமான உதவி மற்றும் எரிபொருளை (காசாவிற்கு) வழங்குவதில் மும்முரமாக இருக்கிறார், அது ஹமாஸுக்கு செல்கிறது” என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான கட்டுரையில் கிவிர் குறிப்பிட்டிருந்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீனர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட நான்கு இஸ்ரேலிய குடியேறிகள் மீது அமெரிக்கா தடை விதித்ததை அடுத்து கிவிர் தனது கோபத்தை வெளியிட்டுள்ளார். “எங்கள் தேசிய நலன்களில் உறுதியாக நிற்கும் அதே வேளையில், அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகத்துடனான நமது உறவுகளை எவ்வாறு வழிநடத்துவது என்பதை அறிய எனக்கு உதவி தேவையில்லை” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது சொந்த அமைச்சருக்கு பதிலளித்துள்ளார்.

இஸ்ரேலிய அமைச்சரவைக்குள் பிளவுகள் ஏற்பட்டிருக்கும் அதேநேரம் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு இஸ்ரேலுக்குள் நெதன்யாகு அரசுக்கு கடும் அழுத்தம் நிலவி வருகிறது. முன்கூட்டி தேர்தலை நடத்தக் கோரி டெல் அவிவில் நூற்றுக்கணக்கானோர் கடந்த சனிக்கிழமை பேரணி நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT