Friday, April 26, 2024
Home » வானொலி நேயர்களை தனது மதுரக்குரலால் வசீகரப்படுத்திய கலைஞர் கற்பிட்டி ஜப்பார்

வானொலி நேயர்களை தனது மதுரக்குரலால் வசீகரப்படுத்திய கலைஞர் கற்பிட்டி ஜப்பார்

by damith
February 5, 2024 10:45 am 0 comment
தனது மனைவியுடன் மர்ஹும் ஜப்பார்

லியாவுல் பன்னான் கலைச்சுடர் எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார் ஒரு காலத்தில் தன் மதுரக்குரலால் வானொலி நேயர்களைக் கட்டிபோட்டவர். 60, 70, 80 களில் இவரது தொனியில் தம் மனதை பறிகொடுக்காதவர் யாருமே இருக்க மாட்டார்கள்.

முதுபெரும் கலைஞர், கவிஞர், நாடக எழுத்தாளர், பாடலாசிரியர், தமிழகத்து பேச்சாளர்களோடு ஒப்பிட்டு பேசும் பன்முக ஆளுமை மிக்க கற்பிட்டி ஜப்பார் அவர்களைப் பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்திருக்க நியாயமில்லை.

நாளை 6 ஆம் திகதி இரவு 8.10 மணியளவில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகும் எமது ‘பாரம்பரியம் நிகழ்ச்சித் தொடர்’ ஜப்பார் பற்றி விரிவாகப் பேசப்போகிறது.

மர்ஹூம் எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார் அவர்களது நினைவுகளை அவரது நெருங்கிய நண்பர், பேராசிரியர், ஆய்வாளர் முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எஸ்.எம். அனஸ் அதிதியாக கலந்து நேயர்களோடு பரிமாறிக் கொள்கிறார்.

கிராம அதிகாரி சேகு இஸ்மாயீல் மரைக்கார், உம்மு ஹபீபா தம்பதியரின் மூத்த புதல்வராக அவர் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கற்பிட்டி அல் அக்ஸா மகாவித்தியாலயத்தில் கற்றார். உயர்கல்வியை சிலாபம் சென். மேரிஸ் கல்லூரியில் தொடர்ந்தார். ஸைனப் ஜப்பாரை (ஓய்வுநிலை ஆசிரியர்) மணமுடித்த இவருக்கு மூன்று ஆண்களும், மூன்று பெண்களுமாக ஆறு பிள்ளைகள்.

முஸ்லிம் சேவைக்கு இவர் குரலால், எழுத்துகளால், கருத்துகளால் வழங்கிய பங்களிப்புகள் அநேகம். அழகு தமிழில் எழுதி, தனக்கே சொந்தமான குரல் ஜாலத்தில் நடித்த நாடகங்களை, இசை, உரைச் சித்திரங்களை, இஸ்லாமிய நற்சிந்தனைகளில் ஒலித்த அந்த சிம்மக்குரலை யார்தான் மறந்து போவர்?

பலதரப்பட்ட நிஜ மனிதர்களை தன் நாடகத்தில் கற்பனைப் பாத்திரங்களாக உலவவிட்டு, அதன் ஒரு பாத்திரமாய் கர்ஜித்து தன் வானொலி நாடகங்கள் மூலமாக சமூக மாற்றத்தை அவர் ஏற்படுத்தினார். குறிப்பாக புத்தளம், கற்பிட்டி வட்டார பாரம்பரியத்தை, அப்பிரதேச வாழ் அடிமட்ட மனிதர்களின், மீனவர்கள்_ முதலாளியினரின் முரண்பாடுகளை மையப்படுத்தி எழுதிய ஒவ்வொரு முஸ்லிம் சேவையின் நாடகமும் இவரது பெயரை பேசவைத்தன.

‘அவன் போட்ட கணக்கு’, ‘முடிந்த முடிவு’, ‘அவள் கொடுத்த தீர்ப்பு’, ‘பெற்றவளா? தொட்டவளா?’ ஆகியவை நாடகங்களுக்கு அவர் போட்ட தலைப்புகளாகும். இவரது நாடகங்களில் நடிப்பதற்காக மூத்த கலைஞர்கள் முன்னிற்பர்.

இசையறிவும் மிக்க எஸ்‌.ஐ.எம்.ஏ. ஜப்பார், ஒரு பாடலாசிரியருமாவார். இசைச்சித்திரங்களுக்கு பாடல்கள் எழுதியதோடு பொதுவான இஸ்லாமிய கீதங்கள் பல எழுதியுள்ளார். சிரேஷ்ட பாடகர்களான பீர் முஹம்மது, டொனி ஹசன், குமாலா சௌஜா எம்.எச்.பௌசுல் அமீர், மஸாஹிரா இல்யாஸ் போன்றோர் பாடியிருக்கிறார்கள். அன்று ஒலிபரப்பான மாதர் நிகழ்ச்சிக்கு பெண் எழுத்தாளர்கள் எழுத பின்வாங்கிய சூழலில் மாதர் சிந்தனைக்கு வலுவூட்ட வல்ல ஆக்கங்களை தன் துணைவியார் திருமதி சைனப் ஜப்பாரது பெயரில் எழுதி நிகழ்ச்சித் தொடர துணைசேர்த்துள்ளார். நாளைய நிகழ்ச்சியை முஸ்லிம் சேவை அதிகாரி எம்.ஜே.பாத்திமா ரினூஸியா தயாரித்தளிக்கிறார்.

1934 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி கற்பிட்டியில் பிறந்த கலைச்சுடர் எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார், 2004 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20 ஆம் திகதி தனது எழுவதாவது வயதில் காலமானார். அவரது ஜனாஸா கற்பிட்டி பெரியபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எம்.எஸ்.எம். ஜின்னா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT