Friday, April 26, 2024
Home » சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி; காலி முகத்திடல் விழாக்கோலம்

சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி; காலி முகத்திடல் விழாக்கோலம்

- தேசிய மாணவர் படையணியில் 6,300 பேர் பங்கேற்பு

by Gayan Abeykoon
February 1, 2024 8:48 am 0 comment

நாட்டின் 76ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வு எதிர்வரும் (04) கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.

இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்படுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார். தேசத்தின் அபிமானத்தை பாதுகாக்கும் வகையில் வழக்கம் போன்று எவ்வித குறைப்பாடுகளுமின்றி கம்பீரமானதாகவும் எளிமையான முறையிலும் இந்த நிகழ்வை நடத்த சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஏழு தசாப்த தேரவாத பௌத்த தொடர்பை வலுப்படுத்தும் வகையில், தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் விஷேட அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இம்முறை நடைபெறவுள்ள சுதந்திர தின பிரதான நிகழ்வின் அணிவகுப்பில் ஆறாயிரத்திற்கும் அதிகமான முப்படை வீரர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணவர்தன தெரிவித்தார்.

எவ்வித மேலதிக நிதி செலவுகள் செய்யப்படாது அந்தந்த படைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஊடாகவே சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் பெப்ரவரி (04) கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெறவுள்ள 76ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வு மற்றும் முப்படைகளின் அணிவகுப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு, நேற்று அரசாங்க தகவல் திணைக்களம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்க்ஷ, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் கருணாரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுதந்திர தின பிரதான நிகழ்வின் சகல ஏற்பாடுகளும் நிறைவுற்றுள்ள நிலையில், முப்படையினரின் ஒத்திகைகள் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன.

இம்முறை சுதந்திர தின பிரதான அணிவகுப்பில் முப்படையினர், பொலிஸ், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த சுமார் 6300 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களில் இராணுவத்தைச் சேரந்து 3163 பேரும், கடற்படையைச் சேர்ந்த 1013 பேரும், விமானப் படையைச் சேர்ந்த 875 பேரும் 289 பொலிஸார் மற்றும் 215 பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 380 பேரும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 551 பேரும் அடங்குவர்.

அத்துடன் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதிகள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு சுதந்திர தின நிகழ்வை சிறப்பிக்கவுள்ளனர்.

இதேவேளை, விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு 2000 பொலிஸார் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு 2000 பொலிஸார் என்ற வகையில் 04 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஸாதிக் ஷிஹான்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT