Saturday, April 27, 2024
Home » சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு, சில தமிழ் அரசியல் தரப்பு மாயையை கிழித்துள்ளது

சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு, சில தமிழ் அரசியல் தரப்பு மாயையை கிழித்துள்ளது

by damith
January 29, 2024 6:00 am 0 comment

தமிழ் அரசியல் தரப்புக்களால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள், அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.எனவே, மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பியிராமல்,தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்திய முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தாக்குதல் தொடர்பாக,சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்,தென்னாபிரிக்கா தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்புத் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே, அமைச்சர் டக்ளஸ் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘கடந்த 14 வருடங்களுக்கு மேலாக சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுத் தரப்படும் என்ற கோஷங்களை சில தமிழ் தரப்புக்கள் தூக்கிப்பிடித்து வருகின்றன.

இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற உயிரிழப்புக்களுக்கான நீதி மற்றும் காணாமல் போனோருக்கான பரிகாரம் போன்றவற்றை சர்வதேச நீதிமன்றத்தின் மூலமே பெற்றக்கொள்ள முடியும் எனவும் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை கொள்ள முடியாதெனவும் இத்தரப்புக்கள் கூறுகின்றன.சர்வதேச நீதிமன்றம் தொடர்பான மாயையை தமிழ் மக்கள் மத்தியில் இந்த அரசியல்வாதிகள் ஏற்படுத்தி இருக்கின்றனர்.

இஸ்ரேல் விவகாரத்தில், சர்வதேச நீதிமன்று வழக்கியுள்ள தீர்ப்பு, சர்வதேச நீதிமன்றத்தின் சிந்தனை மற்றும் பார்வை எத்தகையது என்பதை வெளிப்படுத்தி உள்ளது.

ஆயிரக்கணக்கான மக்களை தினமும் அழித்துக் கொண்டிருக்கிற தாக்குதல்களை நிறுத்துமாறு உலகின் அதியுச்ச நீதிமன்றக் கட்டமைப்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிடவில்லை. இனப்படுகொலை மற்றும் யுத்த குற்றம் தொடர்பான சர்வதேச நியமங்களை மதித்து நடக்குமாறே தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.

காஸாவில் குறுகிய பிரதேசத்தில் பல இலட்சம் அப்பாவி மக்கள் செறிந்து வாழ்கிறார்கள் என்பதோ, தாக்குதல் தொடர்ந்தால் அப்பாவி மக்களின் அழிவுகள் தவிர்க்க முடியாதவை என்பதோ சர்வதேச நீதிமன்றத்துக்கு தெரியாத சமாச்சாரங்கள் இல்லை.

அப்படியிருந்தும் தாக்குதலை நிறுத்துமாறு தீர்ப்பில் சொல்லப்படவில்லை. இவ்வாறான சம்பங்கள் ஊடாக, சர்வதேச கட்டமைப்புக்களின் மனோநிலையையும் அவற்றின் நிகழ்ச்சி நிரல்கள் எத்தகையவை என்பதையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT