தமிழகத்தில் தாமரை கருகிப் போனது ஏன்? | தினகரன்

தமிழகத்தில் தாமரை கருகிப் போனது ஏன்?

நெஞ்சில் சுமந்துகொண்டிருந்த பா.ஜ.க மீதான வஞ்சத்தை தீர்த்து விட்ட தமிழர்கள்!

"தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்" என மூச்சுக்கு முந்நூறு முறை தமிழிசை போன்றவர்கள் கூவியதை தமிழக வாக்காளர்கள் நிராகரித்து விட்டனர். சுட்டெரிக்கும் அக்கினி வெயிலில் தாமரையை தீய்ந்து கருக வைத்து விட்டனர் தமிழக வாக்காளர்கள்.

ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு, நியூட்ரினோ என்றெல்லாம் தமிழகத்தை சுடுகாடாக்க எத்தனை திட்டங்கள் இருக்கின்றனவோ அத்தனையையும் மத்திய அரசு இறக்கிப் பார்த்தது.

ஒட்டுமொத்த தமிழகமே கிளர்ந்து எழுந்து போராடிய போதும், கிஞ்சித்தும் இரக்கம் காட்டவில்லை மத்திய பாஜக அரசு.

காவிரி டெல்டாவில் 400 விவசாயிகள் மாண்டு போன போது மத்திய அரசு இரக்கம் காட்டவில்லை. காவிரி தொடர்பான வழக்குகளில் கர்நாடகாவில் வெல்ல வேண்டும் என்பதற்காக அப்பட்டமாக தமிழகத்தின் உரிமையை காலில் போட்டு மிதித்தது பாஜக.

தூத்துக்குடியில் 13 அப்பாவிகள் ஸ்டெலைட் ஆலைக்காக படுகொலை செய்யப்பட்ட போது அதை நியாயப்படுத்தியது பாஜக. மாண்டு போனவர்களை மாவோயிஸ்டுகள் என கூசாமல் முத்திரை குத்தியது.

ஓகி புயலால் மாண்டு போன மீனவர்களுக்கு உதவ முன்வரவில்லை மத்திய பாஜக அரசு. ஒவ்வொரு புயலின் கோரத்தாண்டவத்துக்கும் தமிழகம் துயரத்தில் தத்தளித்த போது எட்டிப்பார்க்க மனமில்லாத ஆட்சியாக மத்திய பாஜக இருந்தது. அனிதாக்கள் தற்கொலைக்கு தமிழக அரசியல் கட்சிகள் மீது பழிபோட்டது பாஜக.

பச்சைக் குழந்தை போல் கருதும் நெல்நாற்று வயலில் பொக்லைன் இயந்திரங்களை அனுப்பி விவசாயிகளின் நெஞ்சில் ஏறி மிதித்தது மத்திய அரசு.

ஒட்டுமொத்த தமிழகமே எதிர்த்து குரல் கொடுத்த போதும், அத்தனை பேரையும் இந்திய எதிர்ப்பாளர்கள், பிரிவினைவாதிகள், தேசத்துரோகிகள் என முத்திரை குத்தி மூர்க்கத்தைக் காட்டியது மத்திய அரசு.

தமிழ்நாட்டு மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்குப் பதில் வட இந்தியர்கள் திணிக்கப்பட்டனர். இதனை தட்டிக் கேட்டால் "பிரிவினைவாதம் பேசுகிறீர்கள்" என கண்டிப்பாகப் பேசியது பா.ஜ.க.

இத்தனைக்கும் பிறகும் "தமிழக வாக்காளர்கள் பா.ஜ.கவுக்கு வாக்களிப்பார்கள்" என அ.தி.மு.கவின் முதுகில் ஏறி ‘தாமரை மலர்ந்தே தீரும்' என வசனம் பேசியது பாஜக.

நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த பா.ஜ.க மீதான அத்தனை கோபங்களையும் லோக்சபா தேர்தலில் மொத்தமாக இறக்கி வைத்திருக்கின்றனர் தமிழக வாக்காளர்கள்.பா.ஜ.கவின் சித்துவிளையாட்டுகள் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது என்பதை தீர்க்கமாக சொல்லியிருக்கின்றனர் தமிழக மக்கள்.


Add new comment

Or log in with...