ஈரான் எண்ணெய் மீதான தடை விலக்கை நீக்க அமெ. திட்டம் | தினகரன்

ஈரான் எண்ணெய் மீதான தடை விலக்கை நீக்க அமெ. திட்டம்

ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகள் மீது தடைவிதிப்பது குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுக்கவிருப்பதாக சம்பந்தப்பட்ட தரப்பை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு வழங்கப்பட்ட தடைகளுக்கான விலக்கு வரும் மே 2 ஆம் திகதியுடன் முடியவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அறிவித்திருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது பற்றி இராஜாங்க திணைக்களத்தின் இரு அதிகாரிகள் வொசிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளனர்.

“ஈரான் அரசின் தவறான நடத்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மற்றும் அந்த அரசு பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலுக்கு பரந்த அளவில் நடவடிக்கை எடுப்பதே இதன் நோக்கமாகும்” என்று இராஜாங்க திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விலகிக் கொண்டு சுமார் ஓர் ஆண்டுக்குப் பின்னரே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எதிர்பார்க்கப்படும் இந்த நகர்வுக்கு ஆசிய பிராந்தியத்தின் அதிகாரிகள் எதிர்ப்பை வெளியிட்டிருப்பதோடு கடுமையான சந்தை நிலைமை மற்றும் எரிபொருள் விலை உயர்வு தொழிற்துறையை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

எனினும் ஈரான் மீது உட்சபட்ச பொருளாதார அழுத்தத்தை மேற்கொள்வதற்காக தடை விலக்கை அகற்றுவதற்கு டொனால்ட் டிரம்ப் விரும்புகிறார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி அதன் பிரதான வருவாயை முழுமையாக தடுப்பதற்கே அவர் முயற்சித்து வருகிறார்.

ஈரான் எண்ணெயின் நீண்டகால கொள்வனவாளர்களான அமெரிக்காவின் நெருங்கிய நாட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியா இந்த செய்தி குறித்து அவதானம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளன.

இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஈரானிடமிருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்கின்றன. இந்நிலையில் ஈரானிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கடந்த ஆண்டு வலியுறுத்தியது. ஆனால் இறக்குமதியை நிறுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் அவகாசம் கேட்டதால் தடைக்கான கெடுவை மே 2ஆம் திகதி வரை அமெரிக்கா நீட்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் தொடக்கம் இந்த தடை விலக்குக்கு உள்ளான எட்டு நாடுகளில் மூன்று நாடுகளான இத்தாலி, கிரேக்கம் மற்றும் தாய்வான் ஆகியன ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக் கொண்டன.

எஞ்சிய ஐந்து நாடுகளும் அதனைச் செய்யாததோடு தமக்கான தடை விலக்கை நீடிப்பதற்கு பிரசாரம் செய்து வந்தன.

நேட்டோ கூட்டணி நாடான துருக்கி இந்த தடை விலக்கை நீடிப்பது குறித்து வெளிப்படையாகக் கோரி வருகிறது. நாட்டின் ஆற்றல் தேவைக்கு ஈரானின் எண்ணெய் தீர்க்கமாக இருப்பதாக துருக்கி சிரேஷ்ட அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஈரானின் அண்டை நடாக இருக்கும் துருக்கி ஈரானுடனான பொருளாதார செயற்பாடுகளை முழுமையா கைவிட எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தப்பது. இந்நிலையில் மே 2 ஆம் திக‌திக்கு பின்னர் மசகு எண்ணெய் இறக்குமதியை தாடரும் நாடுகளுக்கு‌‌‌‌ அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கவும் வாய்ப்‌புள்ளதாக தெரிகிறது.‌‌


Add new comment

Or log in with...