ஆசிய கடற்கரை கரப்பந்தாட்டம்: | தினகரன்

ஆசிய கடற்கரை கரப்பந்தாட்டம்:

ஆறுதல் வெற்றிபெற்ற இலங்கை

தாய்லாந்தின் சமிலா கடற்கரையில் கடந்த வாரம் நிறைவுக்கு வந்த 20 ஆவது ஆசிய கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் பங்குகொண்டு முதல் சுற்றில் மாத்திரம் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த இலங்கை அணி, தெற்காசிய நாடுகளில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.

கடற்கரை கரப்பந்தாட்டத்தில் ஆசியாவின் முன்னணி நாடுகளாக விளங்குகின்ற அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 16 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 48 அணிகள் இம்முறை போட்டிகளில் களமிறங்கின.

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இருபாலானரினதும் தலா இரண்டு அணிகள் வீதம் 148 வீரர்கள் இம்முறை போட்டிகளில் பங்குபற்றியிருந்ததுடன், இலங்கையிலிருந்து நான்கு வீரர்களும், நான்கு வீராங்கனைகளும் பங்குபற்றினர்.

அத்துடன், இலங்கையின் ஆண்கள் அணிக்கு மலிந்த யாப்பாவும், பெண்கள் அணிக்கு தினேஷா பிரசாதினியும் தலைவர்களாக செயற்பட்டிருந்தனர்.

ஆண்கள் பிரிவுக்காக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் ஜி பிரிவில் இலங்கை சார்பாக போட்டியிட்ட டிரோன் மற்றும் மலிந்த யாப்பாக ஜோடி, 21–19, 21–15 என்ற செட் கணக்கில் மாலைதீவுகளின் அலி மற்றும் அஹமட் ஜோடியை வீழ்த்தினர்.

அதே பிரிவில் 2 ஆவது போட்டியில் பிரபல ஈரான் நாட்டைச் சேர்ந்த ரவூபி மற்றும் மிர்சாலி ஜோடியை எதிர்த்தாடிய இலங்கை வீரர்கள், முதல் செட்டை 21–14 என இழந்தனர். எனினும், இரண்டாவது செட்டை 18–21 என கைப்பற்றி இலங்கை வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற தீர்மானமிக்க 3 ஆவது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஈரான் அணி, 15–10 என அந்த செட்டைக் கைப்பற்றி வெற்றியீட்டியது.

இதேநேரம், 3 ஆவது போட்டியில் ஜப்பானின் கொட்ஸு மற்றும் அஜேபா ஜோடியுடன் போட்டியிட்ட இலங்கையின் டிரோன் மற்றும் மலிந்த ஜோடி (21–14, 21–18) 2–0 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

இதேவேளை, இலங்கை சார்பாக களமிறங்கிய மற்றுமொரு ஜோடியான அஷேன் மற்றும் அஞ்சன ஆகிய இருவரும், தமது முதல் போட்டியில் தாய்லாந்தின் கெங்கோன் மற்றும் அடிசோன் ஜோடியிடம் 21–17, 23–21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை சந்தித்தனர்.

பெண்கள் பிரிவில் இலங்கை சார்பாக களமிறங்கிய 2 ஜோடிகளும் தத்தமது முதல் போட்டிகளில் தோல்வியைத் தழுவிக் கொண்டனர்.


Add new comment

Or log in with...