Saturday, April 27, 2024
Home » சகோதர இனத்தவர்களுடன் நல்லிணக்கத்தை பேணுவது இன்றைய காலத்தின் தேவையாகும்

சகோதர இனத்தவர்களுடன் நல்லிணக்கத்தை பேணுவது இன்றைய காலத்தின் தேவையாகும்

மலாயா பல்கலைக்கழக கல்விப்பீட பீடாதிபதி கலாநிதி இஸ்மத் ரம்ஸி

by mahesh
January 3, 2024 11:00 am 0 comment

இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகம் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு உயர்கல்வித் துறையில் கூடிய கவனம் செலுத்துவதோடு சக இனத்தவருடனும் சகவாழ்வு நல்லிணக்கத்தைப் பேணுவதும் காலத்தின் அவசியத் தேவை என்று மலேசியாவின் மலாயாப் பல்கலைக்கழகக் கல்விப் பீடத்தின் கலாநிதி அஷ்ஷெய்க் இஸ்மத் ரம்ஸி (நளீமி) தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாடு குறித்து ஆராய்வதற்கான கள விஜயமொன்று மள்வானை மக்கள் மன்றத் தலைவரும் அல் முஹ்ஸின் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவருமான எம்.எம்.ஏ இஸ்மாயீலின் ஏற்பாட்டில் கடந்த வாரம் மலேசியாவுக்கு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவ்விஜயத்தின் போது மலாயா பல்கலைக்கழகத்திற்கு இஸ்மாயீல் ஹாஜியார் தலைமையில் இலங்கை பிரதிநிதிகள் விஜயம் செய்திருந்த போது இம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மலேசியாவின் கல்வி மேம்பாட்டை ஆராயும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கள விஜயத்தில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஹில்மி முஹம்மத், இலங்கை சமூக அபிவிருத்திக்கான நிறுவன விரிவுரையாளர் மருதமுனை உபைதுல்லா, மல்வத்தை ரப்பர் மில்ஸ் உரிமையாளர் ஏ.சி.எம். ஹஸன், சாலிய ஒயில் மில்ஸ் உரிமையாளர் எம்.எஸ்.ஏ முஹீஸ் உட்பட எம்.எல்.ஏ. அப்துர் ரஹ்மான், ஹுசைன் சிராஜ், எம்.எம்.ஏ காதர், ஏ.ஆர்.எம். ரஹ்மான், ஏ.ஆர்.எம். அஷ்ரப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கலாநிதி இஸ்மத் ரம்ஸி, மலேசியா பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாக இருந்த போதிலும் சகல இன மக்களும் புரிந்துணர்வுடனும் ஒற்றுமையுடனும் வாழுகின்றனர். மலேசியாவின் முன்னேற்றத்தின் இரகசியமே அதுதான். அந்த வகையில் இலங்கையின் பாடசாலைப் பாடத்திட்டத்தில் இன நல்லுறவு தொடர்பான விடயங்களை உள்ளடக்குமாறு நாம் அரசாங்கத்திற்கு ஏற்கனவே ஆலோசனை வழங்கியுள்ளோம்.

பாடசாலைகளின் முன்னேற்றம் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஆசிரியர்களைப் போன்று திறமைமிக்க முகாமைத்துவப் பண்புகளுடன் பணியாற்றும் அதிபர்களின் கைகளிலுமே தங்கியுள்ளது. அதனால் இலங்கையிலுள்ள அதிபர்களின் திறமைகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர் அதிபர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான உறவு மேம்படுத்த வேண்டும். அப்போது பாடசாலையின் கல்வித் தரம் வளர்ச்சி அடையும் எனவும் குறிப்பிட்டார்.

இச்சமயம் கருத்து தெரிவித்த மள்வானை மக்கள் மன்றத் தலைவர் இஸ்மாயீல் ஹாஜியார், கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி மேம்பாட்டுக்காக மலேசியாவில் பணிபுரியும் பல்கலைக்கழக ஆளுமைகளின் வழிகாட்டல் அவசியம் என வலியுறுத்தினார். அத்தோடு கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்களை மலேசியாவுககு வரவழைத்து கல்வி வலுவூட்டல் நிகழ்ச்சிக்களை நடாத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன..

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT