காலஅவகாசம் வெற்றி காலமாக அமையட்டும் | தினகரன்

காலஅவகாசம் வெற்றி காலமாக அமையட்டும்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத் தொடரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைக்கு சாதகமானதொரு வாய்ப்புக் கிட்டியுள்ளது. புதிய பிரேரணையூடாக இலங்கை வெளிக்காட்டிய முன்னேற்றங்களுக்கு அங்கீகாரமளிக்கும் வகையில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உரிய காலப் பகுதிக்குள் நிறைவேற்றும் என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அதன்போது உறுதியளித்திருக்கின்றார்.

இலங்கை குறித்த புதிய பிரேரணை மூலம் வெளிக்காட்டிய முன்னேற்றங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. 47 உறுப்பு நாடுகள் இலங்கை குறித்த புதிய பிரேரணை தொடர்பில் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதால் பிரேரணை வாக்கெடுப்பெதுவுமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை விடயத்தில் மேலும் சிறிது காலமேனும் அவகாசமளிக்கப்பட வேண்டுமென்பதில் பல நாடுகள் ஆர்வம் காட்டிவந்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் கால அவகாசத்தை இலங்கை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது.

புதிய கால அட்டவணைப்படி இலங்கை அரசாங்கம் இறுதி நேரம் வரை காத்திராமல் முடிந்தளவுக்கு நேரகாலத்தோடு பிரேரணையில் இணங்கப்பட்ட விடயங்களை முழுமையாக நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் இரண்டு வருடகால அவகாசம் என்பது மிக நீண்டதொரு சந்தர்ப்பமாகும். இப்போதுதானே வாய்ப்புக் கிட்டியுள்ளது. போதிய காலம் இருப்பதாக நினைத்து காலத்தை வீணடித்துவிடாமல் சம்பந்தப்பட்ட தரப்புகளை வெற்றி கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும்.

இலங்கை அரசுக்கு இதுவிடயத்தில் மற்றொரு முக்கிய கடப்பாடு காணப்படுகின்றது. அது பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட பிரதான தரப்பான இலங்கை தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பதாகும். தமிழ் மக்களின் ஆறாத வேதனைக்கு மத்தியிலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மீண்டுமொரு கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்கியிருக்கின்றது. தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்க முடியாது போனால் யார் என்ன சொன்னாலும் இதிலிருந்து இலங்கை விடுபடவே முடியாது போகும்.

புதிய பிரேரணையின் உள்ளடக்கம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தேவைப்பாட்டைக் கொண்டுள்ளது. அறிக்கையில் நான்கு செயற்பாட்டு பந்திகள் காணப்படுகின்றது. 30/1 பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவதை வலியுறுத்துவதே முதல் விடயமாகும். அடுத்தது மனித உரிமை, உண்மை, நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை பாதுகாத்து ஊக்குவிப்பதில் இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்துடன் ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டியதாகும். இவ்விரண்டு விடயங்களையும் பொறுப்புடன் கையாளும் போது நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தை அரசியல் நோக்குடன் பார்க்க முற்படக்கூடாது. கடந்த காலத்தில் பெரும்பான்மை சமூகத்தைத் திருப்திப்படுத்தும் நோக்கில் செயற்பட முனைந்ததன் காரணமாகவே இலங்கை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியநிலை ஏற்பட்டது. நீதிப்பொறிமுறை குறித்து என்னதான் பேசினாலும் பாதிக்கப்பட்ட தரப்பு நம்பிக்கை இழந்து காணப்படுவதால் மூன்றாம் தரப்புத் தலையீடு தானாகவே நுழைய வேண்டிய தேவை ஏற்பட்டு விடுவதை தவிர்க்க முடியாது போகும்.

தமிழ் மக்களின் பத்து வருட காலக் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். அடுத்த இரண்டு வருடங்களுக்கும் இந்தக் கண்ணீர் தொடரக்கூடாது. மனம் வைத்தால் 24 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய தேவை கிடையாது. நட்புறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியுமானால் நான்கே மாதத்திற்குள் அப்பாவி தமிழ் மக்களின் கண்ணீரை நிறுத்திவிட முடியும். 30 வருட கால யுத்தத்தில் துயருற்ற மக்கள் போர் முடிந்து பத்து வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் அத்துயரிலிருந்து விடுபட முடியாத நிலை தொடருமானல் மனிதாபிமானம் செத்துவிட்டதா என்ற கேள்விதான் எழுகின்றது.

தமிழ் உறவுகள் என்ன கேட்கின்றார்கள்? தங்களது காணாமல் போனவர்கள், ஒப்படைக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத்தானே கேட்கின்றனர். இதற்குப் பதிலளிப்பதற்கு இவ்வளவு நீண்டகால அவகாசம் தேவைதானா? மனச்சாட்சியை தொட்டுப்பார்த்துப் பேசினால் சரியான பதில் கிடைக்கும். அவர்களும் மனிதர்கள் தானே என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன, மத, மொழி பேதம் கடந்து அனைத்து மக்களும் இலங்கையர்கள், இந்த மண்ணின் மைந்தர்கள் எனச் சிந்தித்து நீதியான, நியாயமான தீர்ப்புக்குரிய மனவெளிப்பாட்டைக் காட்டுவோமானால் நிச்சயமாக தமிழினத்தின் மனங்களை வெற்றிகொள்ள முடியும். இல்லாததை, இழக்கப்பட்டதை தொடர்ந்தும் மூடி மறைப்பது மனங்களை தூரமாக்குவதற்கே வழிவகுக்கும். இதனை மறந்துவிடக்கூடாது.

எனவே இலங்கை அரசாங்கம் இந்த இறுதிச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். காலஅவகாசமாக வழங்கப்பட்ட இரண்டு வருடங்கள் வரை காத்திராமல் காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும். பொறுப்புக் கூறலை சரிவர நிறைவேற்ற முன்வரவேண்டும். சகல பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ள வேண்டும். இந்த இரண்டு வருட கால அவகாசம் சாதகமான, வெற்றியளிக்கும் காலமாக மாறவேண்டுமென்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகும்.


Add new comment

Or log in with...