இந்திய மீனவர்களால் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் பாதிப்பு | தினகரன்

இந்திய மீனவர்களால் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

முல்லைத்தீவு கடற்பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில்நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம்பாதிக்கப்படுவதாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலத்தில்யுத்தத்தினாலும்,ஆழிப்பேரலையினாலும்,இறுதி யுத்தத்தின்போது என தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு மீள்குடியேறியுள்ள முல்லைத்தீவு மீனவர்கள் தற்போது தமது வாழ்வாதாரத்தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளிமாவட்ட மீனவர்களின் வருகையும், இந்திய மீனவர்களின் தொழில் நடவடிக்கையும் தமது தொழில்களை முழுமையாகப் பாதித்துள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்ற கடற்றொழிலாளர்கள் தற்போது இந்திய மீனவர்களின் தொழில் நடவடிக்கையால் தமது தொழில்கள் முழுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் இதனால் கடற்றொழிலை விட்டு வேறு தொழிலை நாடவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (11) இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளால், கடலில் போடப்பட்டிருந்த தமது வலைகள் சேதமாகியுள்ளதாகவும் இதனால் பல இலட்சம் ரூபா நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அதிகளவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இந்தப் பிரதேசத்தில் கடற்றொழிலை நம்பி வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதாவது, ஆழ்கடல் தொழிலுக்குச்சென்று வரும் தொழிலாளர்களின் வாடிகளில் வலைகளை துப்பரவு செய்தல், மீன்களைப் பிரித்தெடுத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து அதன் மூலம் கிடைக்கினற வருமானத்தை வைத்தே தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதாகவும் இவ்வாறு இந்திய மீன்வர்களின் அத்துமீறல்களால் தமக்கும் தொழில் இழக்கப்பட்டுள்ளதாக பெண் தலைமைத்துவக்குடுமபங்கள் தெரிவித்துள்ளனர்.

(பரந்தன் குறூப் நிருபர் - யது பாஸ்கரன்) 


Add new comment

Or log in with...