941 நாட்கள் இடைவிடாமல் இயங்கி கைகா அணுமின் நிலையம் உலக சாதனை | தினகரன்

941 நாட்கள் இடைவிடாமல் இயங்கி கைகா அணுமின் நிலையம் உலக சாதனை

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கர்நாடகாவில் உள்ள கைகா அணு மின் நிலையத்தின் அணு உலை 941 நாட்கள் இடைவிடாமல் இயங்கி, உலக சாதனை படைத்துள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அணுமின் நிலைய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் வட கனரா மாவட்டம் கார்வாரில் உள்ள கைகா அணுமின் நிலையம் கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 16-ம் திகதி செயல்படத் தொடங்கியது.

ரூ.2800 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த அணுமின் நிலையம் உற்பத்தி செய்யும் மின்சாரம் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய 5 மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

இந்த அணு மின் நிலையத்தின் முதல் நிலை கனரக நீர் உலை 895 நாட்கள் இடைவிடாமல் இயங்கி கடந்த ஒக்டோபரில் உலக சாதனை படைத்தது. இதற்கு முன் கனடாவின் ஒன்டாரியோ கனரக நீர் உலை 894 நாட்கள் இயங்கி சாதனை படைத்திருந்தது. 895 நாட்கள் இடைவிடாமல் இயங்கி கைகாவின் கனரக நீர் உலை அந்த சாதனையை முறியடித்தது.

இதைத் தொடர்ந்து கைகாவில் உள்ள முதல் நிலை அணு உலை கடந்த 2016 மே 13-ம் திகதி முதல் 941 நாட்கள் (செவ்வாய்க்கிழமை வரை) இடைவிடாமல் இயங்கி மற்றொரு உலக சாதனையைப் படைத்துள்ளது. அதாவது ஐரோப்பாவில் உள்ள ஹேஷாம் அணு மின் நிலையத்தின் 2-ம் நிலை அணு உலை 941 நாட்கள் தொடர்ச்சியாக இயங்கியதே இதுவரை உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது கைகாவின் முதல் நிலை அணு உலை 941 நாட்கள் இயங்கி ஐரோப்பாவின் சாதனையை தகர்த்துள்ளது.

இதுகுறித்து கைகா அணு மின் நிலைய இயக்குநர் ஜே.ஆர்.தேஷ்பாண்டே கூறுகையில், ‘‘இந்த அணு உலை ஏற்கெனவே 766 நாட்கள் தொடர்ச்சியாக இயங்கி சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து சோதனை அடிப்படையில் இந்த சவாலை முன்னெடுத்தோம். விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு நிறைந்த பணியின் காரணமாக 941 நாட்கள் வெற்றிகரமாக தொடர்ச்சியாக இயங்கி சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ரூ. 1500 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இந்த அணு உலை வருகிற 30-ம் திகதி வரை தொடர்சியாக இயங்கும். அதன்பின் நிறுத்தி வைக்க மத்திய அணு ஆற்றல் கண்காணிப்பு ஆணையத்திடம் அனுமதி வாங்கியுள்ளோம்''என்றார்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, ‘‘கைகா அணு மின் நிலைய அதிகாரிகள் 941 நாட்களைக் கடந்து அணு உலையை இயங்க செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளனர். இந்த மகத்தான பணியில் ஈடுபட்ட அணு விஞ்ஞானிகள் அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் அயராத உழைப்பினால் இந்தியா முன்னேற்ற பாதையில் பயணிக்கிறது.

இந்த சாதனையினால் நாடு பெருமிதம் கொள்கிறது''என வாழ்த்தியுள்ளார். அணு உலைக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் கைகா அணு மின் நிலையத்தின் சாதனை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Add new comment

Or log in with...