Thursday, May 2, 2024
Home » ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

- 2024 செப்.30-க்குள் தேர்தலை நடத்த அறிவுறுத்தல்

by Prashahini
December 11, 2023 2:45 pm 0 comment

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 இரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அங்கு வரும் 2024 செப்டெம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று (11) தனது தீர்ப்பை வழங்கியது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அரசியலமைப்பின் சட்ட விதிகளை குடியரசுத் தலைவர் மத்திய அரசின் ஒப்புதலுடன் ஜம்மு காஷ்மீருக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்றும், மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்ததை எதிர்த்து மனுதாரர்கள் சவால் செய்யாததால் அதன் செல்லுபடியாகும் தன்மை குறித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்க தேவையில்லை. ஜனாதிபதி ஆட்சியின்போது மத்திய அரசால் மாற்ற முடியாத நடவடிக்கை எடுக்க முடியாது என்ற மனுதாரர்களின் வாதங்களை உச்சநீதிமன்றம் நிராகரிக்கிறது. ஜனாதிபதி ஆட்சியின்போது, மாநிலம் சார்பில் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்குள்ளாக்க முடியாது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. இதை அரசியலமைப்பு சட்டம் 1 மற்றும் 370வது பிரிவுகள் தெளிவுபடுத்துகின்றன. அரசியலமைப்பு சட்டம் 370வது பிரிவு தற்காலிகமானது, அதை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு உள்ளது. மாநிலத்தில் போர் சூழல் காரணமாக இடைக்கால ஏற்பாடாகவே அரசியலமைப்பு சட்டம் 370வது பிரிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை. இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு. ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி இறையாண்மையோ, ஆட்சி உரிமையோ இருக்க முடியாது.

ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும். ஜம்மு காஷ்மீருக்கு விரைந்து மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கி, 2024 செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என தலைமை நீதிபதி கூறினார்.

இந்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில், காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக்கில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டப்படியானது மட்டுமல்ல; நம்பிக்கையின் ஒளியாகும் என கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒளிமயமான எதிர்காலத்துக்கான வாக்குறுதியாகும் என்றும் வரவேற்பு அளித்துள்ளார்.

 

வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கூட்டு முயற்சிக்கு சாட்சியாக நீதிமன்ற தீர்ப்பு விளங்குகிறது. 370வது சட்டப்பிரிவால் வஞ்சிக்கப்பட்ட விளிம்பு நிலை சமூகத்திற்கு பயன்களை கொண்டு சேர்க்க உறுதி பூண்டுள்ளோம்.2019, ஆக.5-ம் தேதி நாடாளுமன்றம் எடுத்த முடிவு அரசியல் சட்டப்படி செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியர்களான நாம் உயர்த்திப் பிடிக்கும் ஒற்றுமையை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளதாக மோடி கருத்து தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் ஒற்றுமை, நம்பிக்கை, வளர்ச்சியை பிரகடனப்படுத்தும் தீர்ப்பு என மோடி பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT