பாராளுமன்ற கலைப்பு; டிசம்பர் 07 வரை இடைக்கால தடை | தினகரன்

பாராளுமன்ற கலைப்பு; டிசம்பர் 07 வரை இடைக்கால தடை

பாராளுமன்ற கலைப்பு; டிசம்பர் 07 வரை இடைக்கால தடை-Stay order for Parliament Dissolved Gazette Until Dec 07

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட மனுக்கள் தொடர்பில் நேற்றும் (12) இன்றும் (13)  விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இத்தடையுத்தரவை விதித்துள்ளது.

அதற்கமைய பாராளுமன்றத்தை 10 ஆம் திகதியுடன் கலைப்பது தொடர்பில்,  நவம்பர் 09 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி உத்தரவுக்கு எதிர்வரும் டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட அனைத்து மக்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 - 07 வரை விசாரணைக்குட்படுத்தவும் உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி,  தமிழ் தேசியக் கூட்டமைப்பு,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அரசியல் கட்சிகள் மற்றும் சமூகங்கள் பலவற்றால், பாராளுமன்றத்தை கலைப்பதுதொடர்பாக வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி எதிராக 15 இற்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மேலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஏழாம் திகதி வரை தேர்தல் தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் ஆணையாளருக்கும் இடைக்கால தடையுத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானியில், பொதுத் தேர்தலை ஜனவரி 05 ஆம் திகதி நடாத்துவதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பான விசாரணை பிரதம நீதியரசர் நலின் பெரேரா மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் இரண்டாம் நாளாக இன்றும் இடம்பெற்றது.

இவ்வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

இன்று (13)  காலை 10.00 மணியளவில் குறித்த மனு மீதான விசாரணை, ஆரம்பமானது.

அரசியலமைப்பின் 33 (2) (இ) உப பிரிவுக்கு அமைய, பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி கொண்டுள்ள அதிகாரத்திற்கு அமைய, அவ்விடயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்துடன் குறித்த அதிகாரத்தை, அரசியலமைப்பின் வேறு எந்தவொரு பிரிவும் கட்டுப்படுத்தவில்லை என்பதால், ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர் பாராளுமன்றத்தை கலைத்துள்ளார் என, சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

எனவே 33 (2) (இ) உப பிரிவு கொண்டுள்ள அதிகாரத்தை 70 (2) உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கவேண்டிய அவசியம் இல்லை என சுட்டிக்காட்டிய அவர், 33 (2) (இ) உப பிரிவினால் ஜனாதிபதிக்கு கிடைக்கும் அதிகாரத்தை செயற்படுத்துவதற்கு 70 (1)  பிரிவு அதனை கட்டுப்படுத்தவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்

பாராளுமன்றத்தை கலைத்தைமைக்கு எதிராக இடைக்கால தடை பிறப்பிக்கப்படுமாயின் அது, அரசியலமைப்பு மாத்திரமன்றி மக்களது சுயாதிபத்தியத்தையும் மீறுவதாக அமையும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், குறித்த மனு விசாரணை தொடர்பில், தனது நிலைப்பாட்டை முன்வைப்பதற்கு முன்னர், ஜனாதிபதியின் ஆலோசனையையும் பெற்றுக்கொண்டதாக தெரிவித்த அவர், அது, எந்த வகையிலும் நெறிமுறையை மீறாது எனவும் தெரிவித்திருந்தார்.

எனவே உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எடுத்த முடிவு அரசியலமைப்புக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை  சரியானது என தெரிவித்து, இன்றையதினம் (13) வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், உதய கம்மன்பில, சட்டத்தரணி சீ. தொலவத்தை, பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிந்தன.

சட்டமா அதிபரினால் அளிக்கப்பட்ட விளக்கத்தை அடுத்து குறித்த இடை மனுதாரர்களின்  வழக்கறிஞர்கள் அது தொடர்பில் நீதிமன்றத்தில் விளக்கமளித்தனர்.

அதன் பின்ன்ர், மனுதாரர்களின் வழக்கறிஞர்களுக்கு மீண்டும் விளக்கம் அளிப்பதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து,  தங்களது முடிவை பிற்பகல் 5.00 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்து, வழக்கை பிற்பகல் 3.45 மணியளவில் வழக்கை ஒத்திவைத்தனர்.

வழக்கு விசாரணை இடம்பெற்ற வேளையில் உச்சநீதிமன்றத்தை சூழ பெருமளவிலான கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பொது மக்கள் என பலர் குழுமியிருந்ததோடு, இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தை சூழ, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...