அரசியலமைப்புஇ நிலையியற் கட்டளையை மீறியதாக சபாநாயகருக்கு ஜனாதிபதி கடிதம் | தினகரன்

அரசியலமைப்புஇ நிலையியற் கட்டளையை மீறியதாக சபாநாயகருக்கு ஜனாதிபதி கடிதம்

அரசியலமைப்பையும் பாராளுமன்ற நிலையியற் கட்டளையையும் சபாநாயகர் கருஜயசூரிய மீறியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அனுப்பிய கடிதத்துக்கு அனுப்பியுள்ள பதிலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலான கடிதம் எனக்கு கிடைத்தது.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க வேண்டிய விதம் மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அரசியலமைப்பு மற்றும் நிலையியல் கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

எனினும், அரசியலமைப்பு, நிலையியல் கட்டளை மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது தாங்கள் (சபாநாயகர்) செயற்பட்டுள்ளீர்கள்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பாக சட்ட நடவடிக்கை இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தில் தாங்கள் (சபாநாயகர்) எடுத்துள்ள நடவடிக்கை, அந்த வழக்கு விசாரணைக்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்தின் நம்பிக்கைக்குரிய உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கு, அரசியலமைப்பில் ஏற்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் பிரதமருக்கோ அரசாங்கத்திற்கோ பெரும்பான்மை உள்ளதா, இல்லையா என்பதை நிரூபிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய அவசியமற்றது. பாராளுமன்றத்தினால் உரிய வகையில் உறுதிப்படுத்தப்படாது கையெழுத்திடப்பட்ட ஆவணமொன்றை தமக்கு அனுப்பி வைத்து குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக உறுதி செய்ய சபாநாயகர் எடுத்த முயற்சி தொடர்பில் தாம் கவலையடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2015 ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய தி.மு.ஜயரட்ன பாராளுமன்றத்தில் 162 ஆசனங்களை பெற்றிருந்தார்.

எனினும் அவரை அகற்றிவிட்டு, பாராளுமன்றத்தில் 41 ஆசனங்களை மட்டும் கொண்ட ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்தமை உங்கள் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட அரசியல் கட்சியின் வேண்டுகோளின் மீது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் கருஜயசூரியவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...