ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார் | தினகரன்

ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்

எஸ்.பி.முத்துராமன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான மிஸ்டர் பாரத், ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த டி.எஸ்.வினாயகம் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ்.வினாயகம் (78) நேற்று முன்தினம் சென்னையில் காலாமானார். டி.எஸ்.வினாயகம், பிரபல ஒளிப்பதிவாளர் விஸ்வநாத் ராயிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து, பின்னர் ஒளிப்பதிவாளராக உயர்ந்தவர். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார்.

எஸ்.பி.முத்துராமன் இயக்க, ரஜினி நடித்த மிஸ்டர் பாரத், ராஜா சின்ன ரோஜா, வேலைக்காரன், குரு சிஷ்யன் உள்ளிட்ட எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த வினாயகத்தின் இறுதிச்சடங்கு இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. அதன் பிறகு குன்றத்தூர் அருகில் உள்ள பூந்தண்டலம் கிராமத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

மரணம் அடைந்த டி.எஸ்.வினாயகத்துக்கு சாந்தகுமாரி என்ற மனைவியும், ரவிராஜ், பார்த்திபன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.


Add new comment

Or log in with...