கண் சிகிச்சை செய்துகொண்ட 17 நோயாளர்களுக்கு உபாதை | தினகரன்

கண் சிகிச்சை செய்துகொண்ட 17 நோயாளர்களுக்கு உபாதை

நுவரெலியாவில் பரபரப்பு

உடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் ராஜித அறிவிப்பு

நுவரெலியா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற 17 நோயாளிகளுக்கு ஏற்பட்டிருக்கும் உடல் நல குறைபாடு தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன நேற்று (24) நியூயோர்க்கிலிருந்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்கவுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதியுடன் நியூயோர்க் சென்றிருக்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தொலைபேசி மூலமாகவே பணிப்பாளர் நாயகத்துக்கு இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதேவேளை, மேற்படி கண் சிகிச்சை கிளினிக்கில் வழங்கப்பட்ட ஊசிகள் பயன்படுத்தப்படுவதனை தற்காலிகமாகத் தவிர்க்குமாறு பணிப்பாளர் நாயகம் நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர். அருண ஜயசேகரவுக்கு அறிவித்துள்ளார்.

அண்மையில் நுவரெலியா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை கிளினிக்கில் 55 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். அங்கு வழங்கப்பட்ட ஊசியை பயன்படுத்தியதன் பின்னர் அதில் 17 பேர் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்நோக்கியதாக கூறி மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்தே நியூயோர்க் சென்றிருக்கும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன உடனடியாக இச்சம்பவம் தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்குமாறு தொலைபேசி மூலம் பணிப்பாளர் நாயகத்துக்கு பணிப்புரை பிறப்பித்துள்ளார்.

சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தற்போது குணமடைந்து வருவதாக தெரிவித்த சுகாதார பணிப்பாளர் நாயகம் ஏனைய இடங்களில் இதே ஊசி பயன்படுத்தப்பட்டபோதும் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லையென்றும் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...