ஐ.நா. பொதுச்சபை கூட்டத் தொடர் நியூயோர்க்கில் இன்று ஆரம்பம் | தினகரன்

ஐ.நா. பொதுச்சபை கூட்டத் தொடர் நியூயோர்க்கில் இன்று ஆரம்பம்

ஜனாதிபதி இன்று விசேட உரை

உலக சமூகத்திற்கு முக்கிய யோசனைகள் முன்வைப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73ஆவது கூட்டத்தொடர் நியூயோர்க்கில் இன்று (25) ஆரம்பமாகிறது.

'ஐக்கிய நாடுகள் அமைப்பை மக்களுக்கு நெருக்கமாக்குதல், நிலைபேறான சமூகத்துக்கான உலக தலைமைத்துவ கூட்டுப்பொறுப்பு மற்றும் நிலையான சமாதானம்' என்ற தொனிப்பொருளில் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய முதலாவது அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையாற்றவுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, பொறுப்புக்கூறும் தன்மை தொடர்பில் ஜனாதிபதியின் உரை அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி பதவியேற்ற பின் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் உரையாற்றும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும். இன்று (25) காலை ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரால் நடத்தப்படும் விசேட வரவேற்பு விழாவில் ஜனாதிபதி பங்குபற்றுவார். அதன் பின்னர், ஐக்கிய நாடுகள் சபை 73 வது பொதுச் சபை கூட்ட ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றுவார். பின்னர் மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரால் வழங்கப்படும் மதிய போசன விருந்து வைபவத்தில் கலந்துகொள்வார்.

பின்னர் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றுவார்.

அரச தலைவர்களின் கூட்டம் ஆரம்பிக்கும் முதல் நாளே ஜனாதிபதி உரையாற்றுவது விசேட அம்சமாகும்.

அங்கு இலங்கை தொடர்பான புதிய யோசனைகளையும் ஜனாதிபதி முன்வைக்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு முன்வைத்துள்ள யோசனைகளைச் செயற்படுத்துவது தொடர்பில் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளல், நாட்டின் சுயாதீனத்துக்கும் தேசிய பாதுகாப்புக்கும் மற்றும் முப்படைகளின் கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான யோசனைகள் அதில் அடங்குகின்றன.

ஜனாதிபதி இந்த யோசனைகளை உலக சமூகத்துக்கு தனது உரை மூலம் தெரிவிப்பதுடன் நின்றுவிடாமல், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ்சுக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் மிஸெல் பாஸலேவுக்கும் அறியத் தரவுள்ளார். அந்த யோசனைகள் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் உத்தியோகப்பூர்வமாக முன்வைக்கப்படவுள்ளன.


Add new comment

Or log in with...