விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரிய விக்கியின் மனுவை நீதிமன்றம் நிராகரிப்பு | தினகரன்

விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரிய விக்கியின் மனுவை நீதிமன்றம் நிராகரிப்பு

நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பான மனுமீதான விசாரணையை இடை நிறுத்துமாறு வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் முன்வைத்த கோரிக்கையை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து பெருந்தெருக்கள் அமைச்சர் பதவியிலிருந்து பி. டெனீஸ்வரனை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முடிவை இடைநிறுத்தும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் மீதான விசாரணை முடிவுறும் வகையில் விசாரணைகளை ஒத்திவைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனுவை நேற்றைய தினம் மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

இதன் பிரகாரம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவை நடை முறைப்படுத்துவதை வட மாகாண முதலமைச்சர் உட்பட மூவர் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட டெனீஸ்வரன் தாக்கல் செய்த இந்த மனுவை குமுதினி விக்கிரமசிங்க, ஜனக் டி சில்வா ஆகிய இரண்டு மேன் முறையீட்டு நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வட மாகாண மீன்பிடி போக்குவரத்து பெருந்தெருக்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து வி. டெனீஸ்வரனை நீக்குவதற்கு முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் எடுத்த முடிவு சவாலுக்குட்படுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்படி முடிவை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த இடைக்கால உத்தரவுக்கமைய செயற்படுவதை மறுத்ததன் மூலம் வட மாகாண முதலமைச்சர் நீதிமன்றத்தை அவமதித்ததாக டெனீஸ்வரன் மேன்முறையீட்டு மன்றுக்கு முறைப்பாடொன்றை முன்வைத்தார். அதேவேளை, அந்த மேன்முறையீட்டு நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக சீ. வி. விக்னேஸ்வரன் மற்றொரு மேன்முறையீட்டை உயர் நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுமீதான விசாரணை முடிவுறும் வரை நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டாம் என முதலமைச்சர் விக்னேஸ்வரனின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர்.

அந்தக் கோரிக்கைகளை நிராகரித்து மனுமீதான விசாரணையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், டெனீஸ்வரன் நீக்கப்பட்டதைத் தடை செய்யும் வகையில் வழங்கப்பட்ட இடைக்கால தடை யுத்தரவு ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் வகையில் நீடிக்கப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரனி கே. கனகேஸ்வரன் பிரதிவாதியான விக்னேஸ்வரன் சார்பில் ஆஜரானதோடு சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ மனுதாரரான டெனீஸ்வரன் சார்பாக ஆஜரானார்கள்.


Add new comment

Or log in with...