கண்டம் தாவும் ஏவுகணையின்றி வட கொரியாவில் அணிவகுப்பு | தினகரன்

கண்டம் தாவும் ஏவுகணையின்றி வட கொரியாவில் அணிவகுப்பு

வட கொரியா தனது 70 ஆவது ஆண்டு நிறைவு இராணுவ அணிவகுப்பில் எந்த ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும் காட்சிப் படுத்தவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.

அணு ஆயுதக்களைவு குறித்த வட கொரியாவின் கடப்பாட்டை பரிசோதிக்கும் நிகழ்வாக இந்த இராணுவ அணிவகுப்பு பார்க்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்த பின்னர் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இந்த ஆயுதங்களை காட்சிப் படுத்துவது தொடர்பில் தயக்கம் காட்டியிருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் பிரதான நிலத்தை எட்டக்கூடிய மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை காட்சிப் படுத்துவது ஆத்திரத்தை தூண்டுவதாக இருந்தது.

இந்த இராணுவ பேரணி பற்றிய எந்த படமும் வெளியிடப்படாதபோதும், அங்கு குறித்த ஏவுகணைகளை காண முடியவில்லை என்று அங்கிருக்கும் ஏ.எப்.பி செய்தியாளர் மற்றும் வட கொரிய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளன.

கொரிய தீபகற்பத்தில் அணுஆயுத களைவு தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் உன் இடையே கடந்த ஜுனில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே சுமுக உறவு ஏற்பட்டது.

இரு தரப்புக்கும் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் சந்திப்புகள் தொடர்ந்து நடைபெற்றன. மேலும் 1950களில் நடந்த கொரிய போரில் கொல்லப்பட்ட அமெரிக்க படையினரின் எச்சங்களை வட கொரியா திருப்பிக் கொடுத்த நல்லிணக்க செய்கைகளும் நடந்தேறின.

ஆனால், அண்மையில் நடைபெறுவதாக இருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் வட கொரிய பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. பேச்சுவார்த்தைகளை ஒத்திவைப்பதாக இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தினர்

மேலும் அமெரிக்காவுக்கு எதிராக நடந்துகொள்ள வட கொரியாவுக்கு அழுத்தம் கொடுப்பதாக சீனா மீது டிரம்ப் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் இந்த இராணுவ அணிவகுப்பு அண்மைய முறுகலை தணிப்பதாக இருக்கும் என அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...