முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் விசாரணை; நாளை வாக்குமூலம் | தினகரன்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் விசாரணை; நாளை வாக்குமூலம்

ஊடகவியலாளர் கீத் நொயார்கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட இருப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அவருக்கு ஏன் சி.ஐ.டிக்கு சென்று வாக்குமூலம் அளிக்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகமாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி விசாரணை செய்யப்பட இருப்பது குறித்து வினவப்பட்டது. அவர் வீட்டில் வைத்து விசாரிக்கப்பட இருக்கிறாரா? சி.ஜ.டிக்கு அழைத்து விசாரிக்கப்பட இருக்கிறாரா என இதன் போது வினவப்பட்டது.

இதற்குப்பதிலளித்த அமைச்சர், கீத் நோயார் தாக்கப்பட்ட விவகாரத்தில் அவருக்கும் பதில் வழங்க வேண்டியிருக்கும். ஏனென்றால் இந்த சம்பவத்தில் பல இடங்களில் அவரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.அவருக்கு இந்த வழக்கில் என்ன தொடர்பு இருந்தது என்று எனக்குத் தெரியாது.

பிணைமுறி விசாரணையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்று ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். அதே போன்று இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். அவருக்கு அங்கு சென்று வாக்குமூலம் அளிக்க வேண்டியிருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை எதிர்வரும் 17 ஆம் திகதி அவரிடம் வாக்குமூலம் பெற இருப்பதாக சி.ஐ.டி அறிவித்துள்ளதாக அறிய வருகிறது. அவரின் வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பெற சி.ஜ.டி திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2008 மே 22 ஆம் திகதி முன்னாள் ரிவிர பிரதி ஆசிரியர் கீத் நோயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார். பின்னர் வீட்டிற்கருகில் இறக்கிவிடப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் உட்பட பலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தது தெரிந்ததே.(பா)

 


Add new comment

Or log in with...