சலுகைகளுக்காக வேலைநிறுத்தம் செய்வோர் பொதுமக்களின் உரிமை குறித்தும் சிந்திக்க வேண்டும் | தினகரன்

சலுகைகளுக்காக வேலைநிறுத்தம் செய்வோர் பொதுமக்களின் உரிமை குறித்தும் சிந்திக்க வேண்டும்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றவர்கள் தங்களது வரப்பிரசாதங்களை பற்றி சிந்திப்பதைப் போன்று நாட்டின் அப்பாவி மக்களின் உரிமைகளை பற்றியும் மனிதாபிமானத்தோடு சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வேலை நிறுத்தங்களினால் பாதிக்கப்படுவது நாட்டிலுள்ள அப்பாவி மக்களேயன்றி அரசாங்கம் அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். விகாரமகாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்து சேவைகள், இலவச சுகாதார சேவைகள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றவர்கள் நாட்டின் அப்பாவி ஏழை மக்களேயன்றி வசதிபடைத்தவர்கள் அல்ல என குறிப்பிட்ட ஜனாதிபதி , நேற்று இடம்பெற்ற புகையிரத வேலை நிறுத்தத்தின் காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீடுகளுக்கு திரும்பிச் செல்லும் பிள்ளைகள் உட்பட பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து கவலை தெரிவித்தார்.

தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக எந்தவொருவருக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது எனக் குறிப்பிட்ட அவர் , கடந்த அரசாங்கத்தை போன்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக தற்போதைய  அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.

எனவே நாட்டின் அப்பாவி பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தாது அறிவு பூர்வமாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத மற்றும் மருத்துவத் துறை உள்ளிட்ட வேலைநிறுத்தங்களுக்கு தயாராகிவரும் தொழிற்சங்கங்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இலங்கை ஆயுர்வேத ஔடதங்கள் கூட்டுத்தாபனமும் இலங்கை இராணுவமும் இணைந்து நடாத்திய ஒரு இலட்சம் மூலிகை கன்றுகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித் திட்டம் நேற்று கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

“புனருதய - 60 நாள் செயற்திட்டம்” எனப் பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகை செடி வகைகளை இராணுவ முகாம்களில் முதலில் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆயுர்வேத ஔடதங்கள் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. நிலையான அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் ஒரு நடவடிக்கையாக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள்து.

அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆயுர்வேத ஔடதங்கள் கூட்டுத் தாபனத்தின் தலைவர் லால் சமரசிங்க, இராணுவ கட்டளைத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத்தின் விவசாயப் பணிப்பாளர் பிரிகேடியர் புவனக்க குணரத்ன உள்ளிட்ட இராணுவ உயரதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 


Add new comment

Or log in with...