நகர்ப்புறங்களை இணைக்கும் திட்டம்; இரு அதிவேக சாலைகள் விஸ்தரிப்பு | தினகரன்

நகர்ப்புறங்களை இணைக்கும் திட்டம்; இரு அதிவேக சாலைகள் விஸ்தரிப்பு

*134 கி.மீ நீள மத்திய அதிவேக நெடுஞ்சாலை
* 241 கி.மீ நீள தெற்கு அதிவேக நெடுஞ்சாலை

சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் உரை

134 கிலோ மீற்றர் நீளமான மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் ஹம்பாந்தோட்டை வரையில் 241 கிலோ மீற்றர் நீளமான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விஸ்தரிப்பு ஆகியவற்றின் ஊடாக நகரப் புறங்களுக்கான வழிகள் இரண்டு திறக்கப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூரில் தெரிவித்தார்.

மேல்மாகாண பெருநகரத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் இந்த இரு வழிகளும் 9 மில்லியன் மக்களை இணைக்கும். தெற்கிற்கான பாதையானது 500 ஏக்கர் நிலப்பரப்பில் சூழலுக்கு நட்பான மூன்று பாரிய சுற்றுலா விடுதிகளுடன் அமைக்கப்படவுள்ளது என்றும் கூறினார்.

சிங்கப்பூரில் ஆரம்பமான உலக நகரங்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர், கொழும்பு மற்றும் தலைநகரான ஸ்ரீஜயவர்தனபுர போன்ற பெருநகரங்களை இணைக்கும் வகையில் பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டைல் ரயில்கள், உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலைகள், உயர்த்தப்பட்ட ரயில் பாதைகள், பழைய நீர் இணைப்புக்களை புனரமைத்தல், மூன்று எல்.என்.ஜி மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவை இதில் அடங்குகின்றன. சரக்கு பரிமாற்றத்துக்கான நகரம், விமானப் போக்குவரத்துக்கான நகரம், இயற்கை காடுகள் கொண்ட நகரம் போன்றவற்றையும் இவை கொண்டிருக்கும். இந்து சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவமான அமைவிடத்தை உறுதிப்படுத்தி, உலக பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பைச் செலுத்துவதே இலங்கையின் நீண்டகால நோக்கமாகும் என்றார்.

கழிவுநீர் சுத்திகரிப்பு, திண்மக்கழிவு முகாமைத்துவம், சுற்றுச் சூழல் தொகுதி, ஆற்றங்கரை பாதுகாப்பு வலயம் என்பவை குறித்தும் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. கடற்பரப்பை நிரப்பி அமைக்கப்படும் கொழும்பு துறைமுகத் திட்டம் கரையோர நிதி நிலையமாக செயற்படும். விசேடமான நான்கு பொருளாதார வலயங்கள் தொழிற்துறைக்கான உட்கட்டமைப்புக்களை வழங்கும். இதற்கான திட்டங்கள் பெருநகர அமைச்சின் ஊடாக ஆரம்பகட்டத்தில் உள்ளன.

“எதிர்காலத்தில் வாழக்கூடிய மற்றும் நிலையான நகரங்கள் : சவால்கள்” என்ற தலைப்பில் பிரதமர் உரையாற்றினார். நகரமயமாக்கல் என்பது மாற்றுப் போக்கை உடையதாக இருப்பதுடன், பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாகவிருக்கிறது. மக்களையும், தொழில்துறையையும் ஒன்றிணைத்து, பாரிய நகரங்கள் தொழில்மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் என்பவற்றின் மையங்களாகியுள்ளன. இதனால் பாரிய பொருளாதார நன்மைகளை அடைய முடியும்.

உற்பத்தியை மேம்படுத்தல் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்பவற்றுக்கு நிறுவனங்களும், தொழிலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும். பாரிய நகரங்கள் ஒரு படி முன்னேறிச் சென்றுள்ளன. இவை சர்வதேச சந்தைகளையும், வர்த்தகங்கள் மற்றும் பணியாட்கள் என சகல தரப்பையும் இணைத்து வினைத்திறன் மிக்க மையங்களாக மாறியுள்ளன. இதனால் செல்வங்களை உருவாக்கும் இடங்களாக நகரங்கள் மாறியுள்ளன. கிராமங்களில் இல்லாத வசதிகளின் ஊடாக நகரங்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுகின்றனர் எனவும் பிரதமர் தனதுரையில் குறிப்பிட்டார்.

ஆசியாவின் பாரிய நகரங்களில் காணப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் சவால்கள் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், பீஜிங், டியான்ஜின், கினுவாங்தா ஆகிய நகரங்களுக்கான வழிகள் 100 மில்லியனுக்கும் அதிகமான சனத்தொகையை இணைக்கிறது.

இந்தப் பாரிய நகரங்களின் மையங்கள் பீஜிங்கிலிருந்து பாங்கொக் அங்கிருந்து ஜகார்த்தா அங்கிருந்து மும்பை என எதிர்காலத்தில் விரிவடைந்து செல்லும். ஆசியாவில் உள்ள நகரங்கள் விரைவில் வளர்ந்து வருகின்றன. சிங்கப்பூர், டோக்யோ மற்றும் கொபே ஆகிய மூன்று நகரங்களே உலகின் முதல் 50 நகரங்கள் பட்டியலில் உள்ளடக்கியுள்ளன. மேர்க்கர் வாழ்க்கைத்தர சுட்டியில் இலங்கை உயர்ந்த புள்ளிகளைப் பெற்று தெற்காசியாவில் முன்னணி நகரமாக கொழும்பு காணப்படுகிறது.

231 நகரங்களில் 137ஆவது இடத்தில் உள்ளது. நாம் எதிர்கொள்ளும் சவால் என்னவெனில், தலைவர்கள் இந்த நகரங்களை வாழ்வதற்கு ஏற்றமாதிரியான நகரங்களாக மாற்றவேண்டும் என்பதே.

உலகின் நிலைபேறான அபிவிருத்தி என்பது எமது வெற்றி அல்லது தோல்வியிலேயே தங்கியுள்ளது. திறமையான பெருநகர சுற்றாடல் முகாமைத்துவத்தைக் கொண்ட நகரத்துக்கு சிறந்த உதாரணமாக சிங்கப்பூர் அமைந்துள்ளது. சிங்கப்பூர் மக்களுக்கு தரமான வாழ்க்கைச் சூழலை உறுதிப்படுத்துகிறது என்றார்.

 


Add new comment

Or log in with...