Friday, April 26, 2024
Home » பொத்துவில் கனகர்கிராம மக்களுக்கு கிழக்கு ஆளுநரின் தீபாவளிப் பரிசு!

பொத்துவில் கனகர்கிராம மக்களுக்கு கிழக்கு ஆளுநரின் தீபாவளிப் பரிசு!

73 பேருக்கு காணி அனுமதிப்பத்திரம்

by damith
November 13, 2023 6:04 am 0 comment

பொத்துவில் கனகர் கிராம மக்களில் முதற்கட்டமாக 73 பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் குறித்த காணி அனுமதிப்பத்திரங்களை இரு தினங்களுக்கு முன்னர் திருகோணமலை காணி ஆணையாளர் பணிமனையில் வைத்து வழங்கி வைத்தார்.

ஆளுநர் செந்தில் தொண்டமான் கடந்த யூலை மாதம் 11ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த வேளை சர்ச்சைக்குரிய கனகர் கிராமத்திற்கும் விஜயம் செய்தார். அப்போது உறுதியளித்தபடி குறித்த காணி அனுமதிப்பத்திரங்களை அவர் நேற்றுமுன்தினம் வழங்கி வைத்தார்.

அவ்வைபவத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான தவராசா கலையரசன், எஸ்எம். முஷாரப், கபில அத்துக்கோரள பொத்துவில் பிரதேச செயலாளர் பிர்னாஸ் மற்றும் உள்ளிட்ட பிரமுகர்கள் சமுகமளித்திருந்தனர்.

பொத்துவில் கனகர் கிராம மக்களின் கடந்த 33 வருட கால போராட்டத்திற்கு முதல் கட்ட நிவாரணமாக இந்த காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான போராட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னாள் காரைதீவு தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், பொத்துவில் பிரதேச முன்னாள் உபதவிசாளர் பெருமாள் பார்த்திபன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பிரதான பங்கினை வகித்திருந்தார்கள். போராட்டத் தலைவி ரங்கத்தனா தலைமையிலான மக்கள் குழுவினர் அந்த இடத்திலே முகாம் அமைத்து வருடக்கணக்கில் போராடி வந்தார்கள்.

இங்கு வாழ்ந்து வந்த மக்கள் 1985 இற்குப் பின்னர் யுத்தத்தில் இடம்பெயர்ந்தனர். அங்கு

வாழ்ந்த 226 பேரில் முதல் கட்டமாக 73 பேருக்கு காணியை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஒருவருக்கு 1 ஏக்கர் 20 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும். பயிர்ச்செய்கைக்காக 1 ஏக்கர் காணியும், வீடு அமைக்க 20 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்படவிருக்கிறது.

அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழப்பட்டு காடுமண்டிக்காணப்படுகின்றது. அந்தக்காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும் தகர்ந்தநிலையில் காணப்படுகின்றன. அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன. அம்மக்களின் வேண்டுகோள் இன்று கட்டம் கட்டமாக நிறைவேறத் தொடங்கியிருக்கின்றது.

வி.ரி.சகாதேவராஜா காரைதீவு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT