Saturday, April 27, 2024
Home » ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அரசு துரித ஏற்பாடு

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அரசு துரித ஏற்பாடு

பட்டதாரி நியமனங்களும் முன்னெடுக்கப்படுகிறது

by gayan
November 11, 2023 6:00 am 0 comment

நாட்டில் தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரிதகதியில் நடவடிக்கை எடுக்கப்படுமென்பதுடன், பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கல்வி இராஜாங்க அமைச்சர்

அ.அரவிந்தகுமார் தெரிவித்தார். பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கையை கல்வி அமைச்சர் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர், அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சை அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் குமாரசிறி ரத்நாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே, கல்வி இராஜாங்க மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார். 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பரீட்சைகளுக்கிணங்க இலங்கை அதிபர் சேவை தரம் -03 க்கான நியமனங்களின் பின்னர் அது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். இது தொடர்பாக தற்போது தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இணக்கப்பாடும் காணப்பட்டுள்ளது.

அதேபோன்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மலையக பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்.

இலங்கை அதிபர் சேவை மூன்றாம் தரத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதிபர் சேவை மூன்றாம் தரத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

குமாரசிறி ரத்நாயக்க எம்.பி. தனது கேள்வியின் போது குறிப்பாக, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்மொழி மூலமான ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றன அந்த வகையில், மொனராகலை மாவட்டத்தில் உயர்தரத்தில் கற்பிப்பதற்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. அங்குள்ள மாணவர்கள் மட்டக்களப்பு அல்லது பதுளைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த கல்வி இராஜாங்க அமைச்சர், தற்போது பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை கல்வி அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்படி வெற்றிடங்களை நிரப்ப முடியுமெனத் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT