பாகிஸ்தான் மகளிர், இலங்கை மகளிர் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் தம்புள்ளையில் | தினகரன்

பாகிஸ்தான் மகளிர், இலங்கை மகளிர் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் தம்புள்ளையில்

ஐ.சி.சியின் மகளிர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரினை முன்னிட்டு பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி ஒரு நாள் மற்றும் ரி-20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது.

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகளிலும், 3 20க்கு20 போட்டிகளிலும் இலங்கை மகளிர் அணியை சந்திக்கவுள்ளது. இத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில், ஒரு நாள் போட்டித் தொடர் தம்புள்ளையிலும், ரி-20 தொடர் கொழும்பிலும் நடைபெறவுள்ளது.

இலங்கை அணியின் தலைவியாக அதிரடி ஆட்டக்காரியான சமரி அத்தபத்து மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 28 வயதான இடதுகை துடுப்பாட்ட வீராங்கனையான சமரி, இறுதியாக 2016ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய மகளிர் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய தொடரில் இலங்கை அணியின் தலைவியாக செயற்பட்டார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னிலை வீராங்கனையாக வலம்வந்து கொண்டிருக்கின்ற சமரி அத்தபத்து, இதுவரை 69 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் 12 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 2,053 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதேநேரம் 14 விக்கெட்டுக்களையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

இலங்கை – பாகிஸ்தான் மகளிர் அணிகளின் தலைவிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பு (13) கொழும்பில் நடைபெற்றது. இதில் இலங்கை அணிக்கு மீண்டும் தலைவியாக செயற்பட கிடைத்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சமரி அத்தபத்து கருத்து வெளியிடுகையில்,

இலங்கை கிரிக்கெட், தெரிவுக்குழுவும் என்மீது நம்பிக்கை வைத்து மீண்டும் அணித் தலைமைத்துவத்தை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த காலங்களில் நாம் சிறப்பாக விளையாடியிருந்தோம். எனவே, மீண்டும் அணித் தலைவியாக அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

இன்னும் 4 வருடங்களில் மகளிருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறவுள்ளது. இறுதி 4 அணிகளுக்குள் தெரிவாவதற்கு புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறவேண்டும். எனவே கடந்த காலங்களில் எம்மால் அந்த இலக்கை அடைய முடியாது போனது. அதிலும் உடனடியாக எமக்கு அணியில் மிகப் பெரிய மாற்றங்களை மேற்கொள்ள முடியாது. உலகக் கிண்ணம் வரையிலான காலப்பகுதியில் நீண்ட கால மற்றும் குறுகிய கால இலக்குடன் அணியை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

பாகிஸ்தான் மகளிர் அணியுடனான இப்போட்டித் தொடரில் சிரேஷ்ட வீராங்கனைகளைப் போல இளம் வீராங்கனைகளுடன் இணைந்து எமது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் மகளிர் அணித் தலைவி பிஸ்மாஹ் மாரூப் கருத்து வெளியிடுகையில், ஐ.சி.சி சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2ஆவது கட்டப் போட்டியில் விளையாடுவதற்கு இங்கு வந்துள்ளோம். இங்குள்ள காலநிலை எமக்கு பரீட்சார்த்தமானவையாக உள்ளதால் இப்போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடி வெற்றிபெறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இப்போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு வாரம் உள்ளதால், சிறந்த முறையில் பயிற்சிகளை முன்னெடுத்து போட்டிகளில் களமிறங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அண்மையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மகளிருக்கான விசேட கிரிக்கெட் பயிற்சிப் பட்டறை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இலங்கை மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹேமன்த தேவப்பிரிய பதில் கொடுக்கயைில், ”இந்த பயிற்சிப் பட்டறையின் மூலம் ஒருசில திறமையான இளம் வீராங்கனைகளை நாம் இனங்கண்டு கொண்டோம்.

அவர்கள் தற்போது மகளிருக்கான வளர்ந்து வரும் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அதேபோல பாகிஸ்தான் மகளிர் அணியுடனான போட்டித் தொடருக்கான இலங்கை அணியில் 17 வயதுடைய வீராங்கனையொருவருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளோம். எதிர்வரும் காலங்களில் திறமையான இளம் வீராங்கனைகளுக்கும் அணியில் வாய்ப்புகள் வழங்கப்படும்” என்றார். 


Add new comment

Or log in with...