Friday, April 26, 2024
Home » கல்வியாளர், ஊடகவியலாளர் வி. ரி. சகாதேவராஜாவுக்கு கிழக்கின் உயரிய வித்தகர் விருது

கல்வியாளர், ஊடகவியலாளர் வி. ரி. சகாதேவராஜாவுக்கு கிழக்கின் உயரிய வித்தகர் விருது

by sachintha
November 10, 2023 9:26 am 0 comment

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உயரிய விருதான வித்தகர் விருதுக்காக காரைதீவைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி. சகாதேவராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கல்வித்துறையிலும் ஊடகத் துறையிலும் 35 வருட கால அனுபவம் பெற்ற தம்பிராஜா சகாதேவராஜா பல்துறை வித்தகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் காரைதீவைச் சேர்ந்த வேலுப்பிள்ளை தம்பிராஜா (ஓய்வுநிலை தலைமைஆசிரியர்)_ கைலாயபிள்ளை தங்கநாயகம் தம்பதியினரின் மகனாவார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை இ.கி.ச.ஆண்கள் பாடசாலையிலும், உயர்கல்வியை மட்டக்களப்பு கல்லடி சிவானந்த வித்தியாலயத்திலும் பெற்றார். இவர் 1986 இல் டெலிக் ஆங்கில ஆசிரியராகவும், பின்னர் 1988 இல் விஞ்ஞான ஆசிரியராகவும் நியமனம் பெற்றார். இவர் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் விஞ்ஞானத் துறையில் பயிற்சி பெற்று அதே பாடசாலையில் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராக கடமை ஏற்றார். அதன் பின்பு 1999 இலிருந்து கடந்த 25 வருட காலமாக சம்மாந்துறை கல்வி வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமை ஆற்றி வருகிறார்.

25 வருட காலமாக சமாதான நீதவானாகவும் சேவை ஆற்றி வருகிறார். பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த இவர் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்தார். பின்னர் கல்வி முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்.

1986 களிலிருந்து பல ஊடகங்களுக்கு இன்றுவரை எழுதி வருகின்றார். தேசியப் பத்திரிகைகளின் பிராந்திய செய்தியாளராகவும், கட்டுரை எழுத்தாளராகவும் பணியாற்றி வருகின்றார். சிறந்த ஆசிரியராக, தொழிற்சங்கவாதியாக, எழுத்தாளராக, பேச்சாளராக, அறிவிப்பாளராக, வர்ணனையாளராக, பல்வேறு அமைப்புகளின் தலைவராக, நிர்வாகியாக, சமூகசேவையாளராக, சமயப்பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.

இதுவரை ஆயிரக்கணக்கான காத்திரமான கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘ஊழியில் ஆளி’ என்ற சுனாமி நூலை 2005 இல் எழுதி வெளியிட்டார் .

1992 இல் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் மன்றத் தலைவராக பணியாற்றிய வேளை சுவாமி விபுலானந்தருக்கு நூற்றாண்டு விழா சிலை எழுப்பியதுடன், அங்கு வருடாந்தம் வெளியாகும் ‘கலைச்செல்வி’ சிறப்பு நூலுக்கு ஆசிரியராகவும் பணியாற்றினார் .

அம்பாறை மாவட்ட கலாசார சாகித்திய விழாவில் 2007_2008ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரு தடவை ஊடகத்துறை மற்றும் எழுத்து துறைகளில் ஆற்றிய பணிக்காக அம்பாறை மாவட்ட செயலகம் ‘திகாமடுல்ல அபிமானி’ என்ற விருதும் பாராட்டும் வழங்கியது.

இலங்கை அரசின் அதிஉயர் ஊடக விருதான ஜனாதிபதி ஊடக விருதுச் சான்றிதழ் இவருக்கு 2019 இல் வழங்கப்பட்டது. ‘மக்கள் சேவை ஊடக விருது’ 2007 இல் கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் வைத்து வழங்கப்பட்டது. 2008இல் அம்பாறை மாவட்ட சிறப்பு ஊடகவியலாளர் விருது இரத்தினபுரியில் வைத்து அன்றைய அமைச்சர் மஹிந்த சமரசங்கவினால் வழங்கப்பட்டது. அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் இத்தாலி மற்றும் பேங்க்கொக் நாடுகளில் அவர் விசேட பயிற்சி பெற்றுள்ளார்.

மேலும் சர்வசமயம், சமாதானம், கல்வி தொடர்பில் பங்களாதேஷ், மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பயிற்சி பெற்றார். 2019 இல்இந்துசமய கலாசார அமைச்சு கலைச்சுடர் விருது வழங்கி கௌரவித்தது. காரைதீவு பிரதேச சபை 2007 இல் நடத்திய வித்ய சாகித்திய விழாவில் வித்யகலா ஸ்ரீ எனும் விருதையும் நிந்தவூர் பிரதேச சபை 2000 ஆண்டு நடத்திய விழாவில் விபுல ஸ்ரீ என்ற விருதும் வழங்கின. 2008இல் நாவிதன்வெளி பிரதேச செயலகம் நடத்திய சாஹித்திய விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகள் கிடைத்தன . 2009 இல் காரைதீவு பிரதேச செயலகம் நடத்திய சாஹித்ய விழாவில் விபுலமாமணி விருது வழங்கப்பட்டது.

2011 இல் அகில இனநல்லுறவு ஒன்றியம் சாம தேசமான்ய விருது வழங்கியது.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும், அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராகவும், அம்பாறை மாவட்ட சர்வசமய சம்மேளனம் செயலாளராகவும், சமயங்களின் சமாதானத்திற்கான ஒன்றிய செயலாளராகவும், அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்க உபதலைவராகவும் சேவையாற்றினார்.

தற்போது காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம், விபுலானந்தா ஞாபகார்த்த மன்றம் மற்றும் காரைதீவு விளையாட்டுக் கழகம், மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம் போன்றவற்றின் ஆலோசகராகவும், மட். ஆசிரிய கலாசாலையின் 1991/92 புலன அணித் தலைவராகவும் பணியாற்றிவருகிறார்.

செல்லையா -பேரின்பராசா…

(துறைநீலாவணை நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT