அமைச்சர்களுக்கு ஏற்றவாறு அமைச்சரவையை மாற்ற முடியாது | தினகரன்

அமைச்சர்களுக்கு ஏற்றவாறு அமைச்சரவையை மாற்ற முடியாது

அமைச்சர்களுக்குத் தேவையானபடி அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என சுகாதாரத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பானது கேலிக்குரியது என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை மாற்றங்கள் வேறு முறையிலேயே மேற்கொள்ளப்பட்டன என்றும் அமைச்சர் கூறினார். சுகாதார அமைச்சில் நேற்று முற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

கடந்த ஆட்சியில் அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைச்சர்களை கட்டுப்படுத்துவதற்கே அக்காலத்தில் அமைச்சரவை மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், தாம் நினைத்த அமைச்சுப் பொறுப்புக்கள் கிடைக்கவில்லையென்பதற்காகவே அமைச்சரவை மறுசீரமைப்பை அமைச்சர்கள் சிலர் விமர்சிக்கின்றனர். அவர்களுடைய தேவைக்கு ஏற்ற வகையில் அமைச்ச ரவையை மறுசீரமைக்க முடியாது. பொது மக்களுடன் இணைந்து நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

அமைச்சரவையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து அமைச்சர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். எனினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் ரவீந்திர சமரவீரவுக்கு அமைச்சுப் பதவி வழங்கியமை முக்கியமானதாகும். 1989ஆம் ஆண்டு குழப்ப காலத்தில் பாராளுமன்றத்துக்கு வந்த அவர் 30 வருடங்களாக கட்சிக்காக செயற்பட்டவர். எனினும், கடந்த பொதுத் தேர்தலின் ஊடாக பாராளுமன்றத்துக்கு வந்தவர்கள் அமைச்சுப் பொறுப்புக்களைக் கேட்கின்றனர். ரவீந்திர சமரவீர பொறுமையுடன் செயற்பட்டமையாலேயே அவருக்கு அமைச்சுப் பொறுப்பு கிடைத்துள்ளது. பொறுமையுடன் இருப்பது முக்கியமானது. பதவிகளை ஏற்றுக் கொள்ளும் வரையில் பொறுமையுடன் இருப்பது அவசியமானது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எஞ்சியுள்ள இரண்டு வருடங்களும் மக்களுக்காக அரசாங்கம் சேவைசெய்ய வேண்டும். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் பொது மக்கள் அரசாங்கத்துக்கு நல்லதொரு பாடத்தை புகட்டியுள்ளனர். உள்ளூராட்சி சபைகளில் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைத்தால் பலத்தைப் பெற முடியும். 2015ஆம் ஆண்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சியால் தனித்து ஆட்சியமைத்திருக்க முடியும். எனினும், அரசியல் வெற்றியைவிட நாட்டை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதற்காவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. நான் எந்தவொரு தேர்தல் மேடையிலும் ஐக்கிய தேசியக் கட்சியையோ அல்லது சுதந்திரக் கட்சியையோ விமர்சிக்கவில்லை என்றார்.

அதேநேரம், சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பை பிரதமர் ஏற்றிருப்பது இரண்டு வார காலங்களுக்காகும். அதன் பின்னர் அந்த அமைச்சுப் பொறுப்பு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும். சரத் பொன்சேகாவுக்கு அந்த அமைச்சுப் பொறுப்பை வழங்க பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பலருக்கு விருப்பமில்லை. எனினும், கீழ் மட்ட அதிகாரிகள் விரும்புகின்றனர். நேர்மையாக தீர்மானம் எடுக்கக் கூடிய ஒருவர் அவசியம். இரட்டை வேடம் போடுபவர்கள் இந்தப் பொறுப்புக்கு உரியவர்கள் அல்ல.

இராணுவத்தினர் பற்றிப் பேசுபவர்கள் சரத் பொன்சேகாவை இராணுவ அதிகாரியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அமைச்சுப் பொறுப்புக்களில் தனிநபர்கள் பற்றிய தீர்மானங்கள் தாக்கம் செலுத்த முடியாது. இரண்டு பக்கமும் காலை வைத்துக் கொண்டு செயற்படுபவர்கள் நீக்கப்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி ஆகியன தீர்மானம் எடுப்பதை விட, ஜனாதிபதியும், பிரதமரும் கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத் 

 


Add new comment

Or log in with...