அரசியல் கொதிநிலையில் மக்களின் எதிர்பார்ப்பு | தினகரன்

அரசியல் கொதிநிலையில் மக்களின் எதிர்பார்ப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து கொழும்பின் தேசிய மட்ட அரசியலில் உச்சமட்டக் கொதிநிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கடந்த இரண்டொரு தினங்களாக அவதானிக்க முடிகின்றது.

கிராம மட்டத்தில் வட்டாரத்திற்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட இத்தேர்தலின் முடிவுகள் தேசிய மட்ட அரசியலில் அதிக தாக்கம் செலுத்தி இருப்பதால், அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கடந்த காலங்களிலும் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இருந்தும் அக்காலங்களில் இல்லாத ஒரு கொதிநிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது. அதனால் இந்த அரசியல் கொதிநிலைக்கான அடிப்படைக் காரணி யாது என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழவே செய்திருக்கின்றது.அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.

அதாவது, 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைத்தன. ஏனெனில் அத்தேர்தலின் ஊடாக 225 பாராளுமன்ற ஆசனங்களையும் அதாவது ஐ.தே.க --106, ஸ்ரீ.ல.சு.க 95, தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16, ஜே.வி.பி. 06, ஈ.பி.டி.பியும், ஸ்ரீ.ல.மு.கா.வும் ஒரு ஆசனப்படி பெற்றுக் கொண்டன. ஆனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு 113 ஆசனங்கள் தேவை. இதனை எந்தவொரு தனிக் கட்சியாலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் ஊடாகப் பெற்றுக் கொள்ளக் கிடைக்கவில்லை.

அதன் காரணத்தினால்தான் ஐ.தே.க.வும், ஸ்ரீ.ல.சு.கவும் இணைந்து இரு வருட காலப்பகுதிக்கு இந்த இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைத்துக் கொண்டன. அந்த இரு வருட காலப்பகுதி 2017 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவுற்றது. என்றாலும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இரு கட்சிகளும் சிந்திப்பதற்கு இக்காலப் பகுதியில் அறிவிக்கப்பட்டு இருந்த உள்ளூராட்சித் தேர்தல் இடமளிக்கவில்லை. அதனால் அது தொடர்பில் தேர்தலுக்கு பின்னர் கவனம் செலுத்துவதாக இரு தரப்பும் தெரிவித்திருந்தன.

இவ்வாறான நிலையில் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 239 உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐ.தே.கவும், ஸ்ரீ.ல.சு.கவும் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து ஆளும் ஐ.தே.கட்சியும், ஸ்ரீ.ல.சு. கட்சியும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதியமைச்சர்கள், அமைச்சர்கள் மட்டக் கூட்டங்களையும் ஐ.தே.மு அமைச்சர்கள் கூட்டங்களையும் நடத்தி நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றன.

இணக்கப்பாட்டு அரசாங்கத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ஐ.தே.க விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், ஸ்ரீ.ல.சு. கட்சி அதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள ஐ.தே.க தயாரில்லை. தாம் தனித்து ஆட்சி அமைக்கப் போவதாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.அதற்கு ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் ஐ.தே.க அரசாங்கம் அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு நல்குமென அரசியல் வட்டாரங்களில் கதை அடிபடுகின்றது. ஆனால் அக்கூட்டமைப்பின் பேச்சாளரான யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன், 'தேசியப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக் கொள்ளும் வரையில் எந்தவொரு அரசாங்கத்தையும் நாம் ஆதரிக்கப் போவதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினருக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்பினருக்கும் இடையில் நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டு அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் ஆராயவென அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்குப் பின்னர் இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டமும் ஜனாதிபதி தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இருப்பினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்து இந்திய மற்றும் ஐக்கிய அமெரிக்க தூதுவர்கள் பிரதமரையும், ஜனாதிபதியையும் தனித்தனியாகச் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சுமுகமாகத் தீர்ப்பது குறித்து அவர்கள் கலந்துரையாடிதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள இவ்வாறான கொதிநிலையில் ஆட்சியைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை ஐ.தே.க சாணக்கியத்துடன் முன்னெடுத்து வருகின்றது. என்னதான் அரசியல் நெருக்கடி, கொதிநிலை என்றாலும் நாடு மீண்டும் 2015 முன்பு இருந்த நிலைக்கு செல்ல இடமளிக்கக் கூடாது என்பதே நாட்டின் மீது உண்மையான அன்பு கொண்ட சகலரதும் விருப்பமாக உள்ளது.

ஆகவே நாட்டின் எதிர்கால சுபீட்சத்திலும் முன்னேற்றத்திலும் முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டியது சகலரதும் பொறுப்பாகும்.


Add new comment

Or log in with...