Saturday, April 27, 2024
Home » கவனிப்பாரற்ற அவலநிலையில் கரவெட்டியின் முக்கிய வீதி!

கவனிப்பாரற்ற அவலநிலையில் கரவெட்டியின் முக்கிய வீதி!

by damith
November 7, 2023 5:55 am 0 comment

வடமராட்சி, கரவெட்டியில் முக்கியமான ஒரு வர்த்தக மையமாக வளர்ந்துவரும் நெல்லியடி நகருக்கு மிகவும் அருகாமையில் இருக்கும் சாமியன் அரசடி சந்தியிலிருந்து தெற்கு நோக்கி சோனப்பு மயானவெளிக்குச் செல்லும் சுமார் ஒரு கிலோ மீற்றர் வீதி சில வருடகாலமாக செப்பனிடப்படாமல் இருப்பதன் காரணமாக மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

இந்த வீதியில் இரு வைத்தியசாலைகள் இருக்கின்றன. இரு முக்கிய பாடசாலைகளுக்கும் தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலயத்துக்கும் இந்த வீதியூடாகவே செல்லவேண்டும்.

கோடை காலத்திலேயே மோசமான நிலையில் காணப்படும் இந்த வீதியில் மாரிகாலத்தில் மக்கள் அறவே பயணம் செய்யமுடியாத அளவுக்கு ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கிக் காணப்படுகிறது.

வீதியைச் செப்பனிடப்படுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது சிலர் செய்ததாகக் கூறப்படும் இடையூறுகள் காரணமாக அது நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. குண்டும் குழியுமாக காணப்படும் இந்த வீதிக்குச் சமாந்தரமாக இருக்கும் பல வீதிகள் செப்பனிடப்படுகின்ற போதிலும், இதை செப்பனிடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கரவெட்டி மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கரவெட்டி உடுப்பிட்டி தேர்தல் தொகுதியின் முக்கிய பகுதியாகும். யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரில் நான்கு பேர் உடுப்பிட்டி தொகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

இவ்வாறான நிலையில் தங்கள் கிராமத்தின் மத்தியில் உள்ள முக்கிய வீதி ஒன்று இத்தகைய அவலநிலையில் இருப்பதையிட்டு கரவெட்டி மக்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர்.

சோனப்பு மயானத்துக்குச் செல்லும் வீதி என்பதால்தான் இவ்வாறு அலட்சியம் செய்யப்படுகிறதோ என்று சிலர் சமூக ஊடகங்களில் கேலி செய்வதையும் காணக்கூடியதாக இருந்தது. இந்த வீதியைச் செப்பனிடுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் காரணிகளை அடையாளம் கண்டு துரிதமாக செப்பனிடும் பணிகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பாலன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT