ரவி, அர்ஜுனுக்கு எதிராக வழக்கு தொடர்வதை ஐ.தே.க ஏற்பு | தினகரன்

ரவி, அர்ஜுனுக்கு எதிராக வழக்கு தொடர்வதை ஐ.தே.க ஏற்பு

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கும் எதிராக வழக்கு தொடர வேண்டும் என்ற பிணைமுறி ஆணைக்குழுவின் பரிந்துரையை ஐ.தே.க ஏற்றுக் கொள்வதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

பிணை முறி தொடர்பான செயற்பாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தவறு செய்யவில்லை என ஆணைக்குழு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் விடுத்த விசேட அறிவிப்பு பற்றிய ஐ.தே.கவின் நிலைப்பாட்டை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அர்ஜுன் மகேந்திரனை பிரதமர் நியமித்தது தவறு என பலரும் பிரதமர் மீது குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் அவரை நியமித்தது சரியானது என ஆணைக்குழு கூறியுள்ளது.

அவர் வெளிநாட்டவர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் உலகில் ஏனைய நாடுகளிலும் இவ்வாறு வெளிநாட்டவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய வங்கியின் இரகசியத் தன்மை தொடர்பில் ஆணைக்குழுவில் அம்பலமான பல விடயங்கள் தொடர்பில் பிரதமருக்கு தெரிந்திருக்கவில்லை எனவும் தனக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகளை நம்புவது தவறல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவர் பொலிஸ் உத்தியோகத்தரோ இரகசிய பொலிஸ் அதிகாரியோ அல்ல. அவருக்கு இது தொடர்பான தகவல் கிடைத்திருக்கவில்லை எனவும் அவர் கூறினார். 


Add new comment

Or log in with...