அரசியல் பிரவேசத்துக்கு ஆசி பெற்றதாக ரஜினி கூறியதால் திமுகவில் கொந்தளிப்பு | தினகரன்

அரசியல் பிரவேசத்துக்கு ஆசி பெற்றதாக ரஜினி கூறியதால் திமுகவில் கொந்தளிப்பு

திமுக தலைவர் கருணாநிதியுடனான சந்திப்பை நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு பயன்படுத்தியதாக திமுகவினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கடந்த 31-ம் திகதி ரஜினி அறிவித்தார். ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன. குறிப்பாக திமுகவினரும் தமிழ்த் தேசியம் பேசுவோரும் அவரை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு திமுக தலைவர் கருணாநிதியை ரஜினி சந்தித்தார். அப்போது அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் உடனிருந்தார்.

தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்த பின் கருணாநிதியை ரஜினி சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்ததுடன், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன். தனிக்கட்சி தொடங்குவதற்காக ஆசி பெற்றேன்” என்று கூறினார். இது திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திமுக முக்கியத் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் கருணாநிதியை மாற்றுக் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் சந்தித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் ரஜினி கேட்டதும் நேரம் ஒதுக்கப்பட்டது. உடல்நலம் விசாரித்து விட்டு திரும்பி விடுவேன் என்றுதான் அவர் ஸ்டாலினிடம் கூறியிருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக மரியாதை நிமித்தமான இந்தச் சந்திப்பை தனது அரசியலுக்கு பயன்படுத்தும் வகையில் அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்து பெற்றேன் என கூறியது வேதனை அளிக்கிறது. ரஜினியிடம் இதனை எதிர்பார்க்கவில்லை” என்றார்.

அன்று ரஜினி சென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “மரியாதை நிமித்தமாகவே கருணாநிதியை ரஜினி சந்தித்தார். தமிழ்ப் பண்பாடு, நாகரிகத்தின் அடிப்படையில் அவருக்கு கருணாநிதி வாழ்த்து தெரிவித்திருக்கலாம். ரஜினி ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

திராவிட இயக்கத்தை அழிக்கவே ரஜினி தனிக்கட்சி தொடங்குவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் பண்படுத்திய திராவிட மண் இது. எனவே இந்த மண்ணிலிருந்து திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது” என்று காட்டமாகக் கூறியிருந்தார்.

ரஜினியின் செயலால் கோபமடைந்த ஸ்டாலின் அதன் வெளிப்பாடாகவே இப்படித் தெரிவித்ததாக திமுகவினர் கூறுகின்றனர். கடந்த புதன்கிழமை கருணாநிதியை சந்தித்த மு.க.அழகிரி, ரஜினியை விரைவில் சந்திக்க இருப்பதாகத் தெரிவித்தார். இதுவும் ஸ்டாலினின் கோபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அழகிரியை ரஜினி சந்தித்தால் அவரை நிரந்தர எதிரியாக பார்க்கும் நிலையும் ஏற்படும் என்கின்றனர் திமுகவினர்.

திமுக செய்தித் தொடர்பாளர்களும், தீவிர திமுக ஆதரவாளர்களான திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோரும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கருணாநிதியை சந்தித்து அரசியல் பிரவேசத்துக்கு ஆசி பெற்றதாக ரஜினி கூறியது திமுகவினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. சமூக ஊடகங்களில் திமுகவினர் ரஜினியை கடுமையாக விமர்சிக்கின்றனர்.


Add new comment

Or log in with...