திருநங்கைகளின் கண்ணீர்க் கதை! | தினகரன்

திருநங்கைகளின் கண்ணீர்க் கதை!

"எங்களுக்கென்று ஒரு நிலையான இடமில்லை. தினம்தினம் நாடோடிகளைப் போல ஓடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் நிலையாக வாழ வேண்டுமெனில், எங்களுக்கென ஒரு நிரந்தர இடம் வேண்டும்” என காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் சார் ஆட்சியரிடம் மனுக் கொடுக்க நேற்று வந்திருந்தார்கள் திருநங்கைகள்.

மதுராந்தகம் சார் ஆட்சியரிடம் மனுக் கொடுக்க வந்த திருநங்கைகள் பின்வருமாறு கூறுகிறார்கள். “நாங்கள் மதுராந்தகம் அருகே உள்ள படாளம் பகுதியில் உள்ள நடராஜபுரத்தில் தங்கியிருக்கிறோம். சுமார் 60 பேர் வரை அங்கிருக்கிறோம். எங்களுக்கு நிரந்தர வருமானமோ, வாழ்வாதாரமோ எதுவும் கிடையாது. நாங்கள் வாடகை வீட்டில்தான் இருக்கிறோம்.

வாடகையைக் கொடுப்பதற்குக் கூட நிலையான தொழில் கிடையாது. திருநங்கைகளுக்கு வீட்டை வாடகைக்குக் கொடுக்க யாரும் முன்வருவதில்லை. அப்படி ஒருவேளை, வீட்டு உரிமையாளரே வாடகைக்கு வீடு கொடுக்க முன்வந்தாலும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எங்களுக்கு வீடு கிடைக்காதவாறு தடுத்து விடுகிறார்கள். ஒரு சில இடங்களில் ஏற்கெனவே திருநங்கைகள் தங்கியிருக்கிறார்கள்.

அவர்கள் மூலமாகத்தான் அப்பகுதியில் எங்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்கிறது. அப்படியே வாடகை கொடுக்க ஒப்புக் கொண்டாலும், இரண்டு மடங்கு, மூன்று மடங்கு வாடகையை உயர்த்தித்தான் வீடு கொடுக்கிறார்கள். இதனால் ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கும் வீடுகளில் கூட நாங்கள் அதிகப்படியான வாடகை கொடுத்துத்தான் வாழ வேண்டியிருக்கிறது. வேறு வழியே இல்லாமல் அந்த வீடுகளைத் தேர்ந்தெடுத்து வாழ்கிறோம்.

இந்தச் சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட எங்களைப் போன்றோருக்குக் குடும்பம் என்பது இல்லை. எங்கள் சமூகத்தில் உள்ளவர்கள்தான் எங்களுக்கு உறவினர்கள். சமூகம் எங்களைத் தனிமைப்படுத்திய நிலையில், மனஅழுத்தத்துடன்தான் வாழ்கிறோம். அதில், தனிமை என்பது இன்னும் கொடுமையானது. அதனால் எங்களைப்போன்ற சிலருடன் நான்கு பேர், மூன்று பேர் எனக் குழுகுழுவாகச் சேர்ந்து வாழ்கிறோம்.

இது, எங்களுக்கு ஒருவகையில் ஆறுதலாக இருக்கும். 4,000 ரூபா வாடகை என்றால், அதை நான்கு பேர் பிரித்துக் கொள்வோம். ஆனால், 'நான்கு பேராக இருக்கக் கூடாது. ஒருவருக்குத்தான் வீடு, இரண்டு பேர்தான் தங்க வேண்டும்,' என்று கண்டிப்போடு வீட்டு உரிமையாளர்கள் சொல்லிவிடுகிறார்கள். நான்கு பேராகச் சேர்ந்து வாழும் போதே சில நேரங்களில் எங்களால் வாடகை கொடுக்க முடிவதில்லை. இப்படி இருக்கும் போது தனிஒருவராக 5,000 ரூபா வாடகையை எப்படிக் கொடுக்க முடியும்?

குடும்பமாக வாழ்பவர்களுக்கு அவர்களின் உறவினர்கள் எப்படி வீட்டுக்கு வருவார்களோ, அதைப் போல் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் எங்கள் வீடுகளுக்கு வருவார்கள். அப்படி யாராவது வீட்டுக்கு வந்தால், 'அவங்க எதுக்கு வீட்டுக்கு வர்றாங்க? இங்கே தங்குபவர்களை தவிர யாரும், இந்த வீட்டுக்கு வரக்கூடாது ' என வீட்டு உரிமையாளர்கள் மிரட்டுகிறார்கள். எங்களுக்கென்று சொந்த வீடாக இருந்தால் எங்கள் உறவினர்கள் வருவதற்கு எந்தத் தடையும் இருக்காது. ஒருசில நேரத்தில், ‘அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காலி செய்யச் சொல்கிறார்கள்.

நீங்க வெளியே போங்க ’ என எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென வீட்டு உரிமையாளர்கள் சொல்லி விடுவார்கள். இத்தகைய சூழலில் நாங்கள் எங்கே தங்க முடியும்? பொது இடங்களில் இரவு நேரத்தில் தங்கினால் ஏற்படும் பிரச்சினைகளைச் சொல்லி மாளாது. எங்களுக்கென்று ஓர் இடம் கொடுத்தால் போதும். நாங்கள் அங்கே நிரந்தரமாக தங்கிக் கொள்வோம்.

வேலை கொடுக்க யாரும் முன்வருவதில்லை. மூன்றுவேளை உணவுக்காக இந்தச் சமூகத்தில் போராட வேண்டி இருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காகச் சிலர் டான்ஸ் ஆடப் போவோம். சிலர் திருமணக் கூடங்களில் சமையலுக்குச் செல்வோம். இப்படி எந்த வேலையும் கிடைக்காதவர்கள், இந்தச் சமூகத்திலே கையேந்தும் அவலத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பொது இடத்தில் நான்கு பேர் கைஏந்தும் நிலை ஏற்பட்டால், அது நானூறு பேருக்குத் தெரிகிறது. ஆனால், ஒரு திருமண மண்டபத்தில் நான்கு பேர் வேலை செய்தால், 40 பேருக்குக் கூடத் தெரிவதில்லை. அதனால்தான் எங்களுக்கென்று நிரந்தர இடம் வேண்டும் என்று கேட்கிறோம்".

இவ்வாறு கண்ணீர் வடிக்கிறார்கள் திருநங்கைகள்.


Add new comment

Or log in with...