பங்காளிக் கட்சிகளின் திடமான நம்பிக்ைக | தினகரன்

பங்காளிக் கட்சிகளின் திடமான நம்பிக்ைக

நல்லாட்சி அரசாங்கத்தின் பயணம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தி இருக்கும் உத்தரவாதம் நாட்டின் எதிர்காலம் குறித்த ஒரு நல்ல சமிக்ஞையாக அமைந்திருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. 2020 வரை இந்த ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கையுடன் பயணத்தை தொடர்வதாகவும், அரசிலிருந்து யார் விலகினாலும் அது அரசுக்கு பாதகமாக அமைய மாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்திருப்பதை ஆரோக்கியமான உறுதிமொழியாக கருதமுடிகிறது.

இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்லும் கூட்டாட்சியை சில சக்திகள் சீர்குலைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வதை தம்மால் அறிய முடிந்த போதிலும், அவ்வாறான சக்திகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும், அவர்கள் விடயத்தில் அரசு கடுமையாகவே நடந்து கொள்ளும் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எவர் வெளியேறினாலும் ஆட்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் கடப்பாட்டை தாம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

நல்லாட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அதனைக் குழப்புவதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சி இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்டதொன்றாகும். மக்களாணை இரு கட்சிகளுக்குமே வழங்கப்பட்டுள்ளது. எனினும் அரசுக்குள் இரண்டு கட்சிகளும் கீழ் மட்டத்தில் முறுகிக் கொண்டுள்ள போதும் தலைமைத்துவங்கள் இரண்டும் ஆட்சியை 2020 வரை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு உறுதி பூண்டிருக்கின்றன.

நேற்றுமுன்தினம் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பை ஜனாதிபதி மேற்கொண்டார். அதன் போதே அரசின் பயணம் தொடர்பாக பல்வேறுபட்ட எதிர்வு கூறல்களை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார். அதில் முக்கியமானதுதான் எத்தகைய தடைகள் வந்தபோதும் ஆட்சியை 2020 வரை தொடர்வது என்ற உறுதிப்பாடாகும். உள்ளோ, வெளியோ யார் விமர்சித்த போதிலும் அரசின் பயணம் தடைப்படப் போவதில்லை என்ற உறுதியான நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சதித்திட்டங்களை எப்படி முறியடிப்பது என்பது தொடர்பிலும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதையும் ஜனாதிபதி மறைமுகமாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றார். இரண்டு கட்சிகளுக்குமிடையிலான இணக்கப்பாடு எதிர்வரும் டிசம்பருடன் நிறைவடைகின்ற போதும் ஆட்சியை தொடர்வதற்கு இரு தலைவர்களும் இணங்கியுள்ளனர். ஆனால் சுதந்திரக் கட்சித் தரப்பு தனியான அரசை அமைப்பதற்கு முனைப்புக் காட்டியபோதும் ஜனாதிபதி அதற்கு உடன்படாததால் சு.கவுக்குள் சிறு சலசலப்பு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. சுதந்திரக் கட்சியில் உள்ள சிலர் மஹிந்த தரப்பை மீள இணைத்துக்கொள்ளும் ஒரு முயற்சியிலீடுபட்டு வருகின்றனர். இவர்கள் விடயத்தில் ஜனாதிபதி மிக விழிப்புடன் கண்காணித்து வருகின்றார்.

சுதந்திரக் கட்சியினர் மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சியினரும் தனியாக ஆட்சி அமைக்கப் போவதாக கூறி வருகின்றனர். இரு கட்சிகளிலும் இவ்வாறான முரண்பாடுகள் காணப்படுகின்றன. இது ஒன்றும் புதுமையானதல்ல. ஜனநாயக நீரோட்டத்தில் இது சகஜமானது. ஆனால் தலைமைகளின் மன உறுதி காரணமாக நல்லாட்சி தொடர்ந்து நீடிக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது.

பாராளுமன்றத்தில் இன்று காணப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூர்ந்து அவதானிப்போமானால் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியை அமைக்க முடியாது. எந்தக் கட்சியும் மற்றொரு தரப்பின் உதவியை நாடியேயாக வேண்டும். எந்தக் கட்சிக்கும் 113 பெரும்பான்மை கிடையாது. இந்த அரசின் பதவிக்காலம் முடிவுற்று பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டதன் பின்னரே எதிர்காலத்தில் தனிக்கட்சி ஆட்சியா, கூட்டாட்சியா என்பதை தீர்மானிக்க முடியும். இந்த நிலையில் எந்தக் கட்சி என்ன பேசினாலும் அது குறித்து அலட்டிக் கொள்ளும் தேவை கிடையாது.

1977 இல் நடந்த பொதுத் தேர்தலில் ஜே. ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 5/6 பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி தொடர்ந்து 17 வருடங்கள் வரை அக்கட்சி ஆட்சியை தொடர்ந்தது. அதன் பின்னர் நடந்த எந்தத் தேர்தலும் தனிக் கட்சியொன்று அதிகாரத்தைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த மாற்றம் ஏன் ஏற்பட்டது என்பதை எண்ணிப் பார்க்கின்ற போது, கட்சி அரசியல் சந்தை வியாபாரம் போன்று மாறியதையே பார்க்க முடிகிறது. எதிர்காலத்திலும் இந்த நிலையே தொடரும் என்பதுதான் நிதர்சனமானதாகும்.

விருப்பு வாக்குமுறையிலான விகிதாசாரத் தேர்தல் முறை முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்து வரக்கூடிய தேர்தல்கள் வட்டார அல்லது தொகுதி வாரித் தேர்தல் முறையாகும். எவரும் விருப்பு வாக்குக்காக அலைய வேண்டியதில்லை. எதிர்காலத் தேர்தல்களின் போது கட்சிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. போலி வாக்குறுதிகளில் கலாசாரம் இனி மேல் மக்கள் முன்பு எடுபடப் போவதில்லை. மக்கள் சிந்தித்துச் செயற்படும் நிலை யதார்த்தபூர்வமாகவே ஏற்பட்டுள்ளது. மக்களை இனி மேலும் தேர்தல்களில் ஏமாற்ற முடியாது.

கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று நாடு பற்றிச் சிந்திக்கின்ற போது கடந்தகாலத்தை எடைபோட்டே மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்துவர். அதனை மனதில் கொண்டே தேர்தல் களத்தில் குதிப்பவர்கள் செயற்பட வேண்டும். அடுத்த தேர்தலுக்கு முன்னர் நல்லாட்சி அரசு நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன. மக்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடியதாக 2015ல் மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்றக்கூடியதாக இந்தப் பயணம் தொடர வேண்டும். ஆட்சி மாற்றம் அல்ல தேவைப்படுவது மன மாற்றமே ஆகும். மக்கள் மனங்கள் வெல்லப்பட வேண்டும். இந்த யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட வேண்டியது ஆட்சியில் உள்ளோரின் பொறுப்பாகும்.


Add new comment

Or log in with...