அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 மணிநேரம் விசாரணை | தினகரன்

அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 மணிநேரம் விசாரணை

அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அமைச்சருக்கு சொந்த மான குவாரி, கல்வி நிறுவனங்களில் நடந்த வரி ஏய்ப்புகள் குறித்தும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடந்த ரூ.89 கோடி வினியோகம் குறித்தும் அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வருமான வரித்துறை இரகசிய கண்காணிப்பில் இருந்து வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் வீடுகளில் ஏப். 7ல் திடீர் சோதனை நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது சொந்த வீடு, அவர் நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள், குவாரி என 37 இடங்களில் சோதனை நடந்தது.

தேர்தல் ரத்து

அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கின. அவற்றின் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட அதே நாளில், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி; நடிகரும்,ச.ம.க. தலைவருமான சரத்குமார்; அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடந்தது. அதற்கு அடுத்த நாள் திருச்சியில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் விஜய பாஸ்கரின் தந்தை சின்னதம்பி விசாரிக்கப்பட்டார்.

ஏப். 10ல் விஜயபாஸ்கர் சென்னை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அவரைத் தொடர்ந்து சரத்குமார், அவரது மனைவி ராதிகா, துணைவேந்தர் கீதாலட்சுமி, ராஜேந்திரன் ஆகியோரும் அடுத்தடுத்து ஆஜராகினர்.

இதற்கிடையில் மணல் கொன்ட்ராக்டர் சேகர் ரெட்டி நிறுவனத்தில் விஜயபாஸ்கர் பங்குதாரராக இருப்பதாக வருமான வரித் துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரியில் விதி மீறல், வரி ஏய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் 2016ல், சென்னையில் சிக்கிய குட்கா ஆலை உரிமை யாளர்களிடம் பெறப்பட்ட கமிஷன் தொகை பற்றியும் விசாரணை நடந்தது.

வங்கி கணக்கில்

இந்நிலையில் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில் மீண்டும் அவர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மாலை 6:30 மணி வரை கிடுக்கிப்பிடி விசாரணை நடந்துள்ளது.

விஜயபாஸ்கருக்கு சொந்தமான மதர் தெரசா பொறியியல் கல்லுாரி, கலை அறிவியல் கல்லுாரி கணக்கு வழக்குகளை, மனைவி ரம்யா கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது பெயரில் உள்ள வங்கி கணக்குகளிலும், அதிக அளவில் பரிவர்த்தனை நடந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

எட்டு மணி நேரம்

கல்லுாரி தொடர்பான பணம் ரம்யாவின் வங்கி கணக்கில், 'வைப்பு' செய்யப்பட்டுள்ளது. விஜயபாஸ்கரின் வேட்பு மனு விலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை பற்றியெல் லாம், ரம்யாவிடம் அதிகாரிகள் சரமாரியாக கேட்டுஉள்ளனர். மேலும் சென்னை ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாகவும் அவரிடம் கேள்விகள் கேட்கப் பட்டு உள்ளன. எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையில் தேவையான பல்வேறு தகவல்களை அவர் கூறியுள்ளதாக தெரிகிறது. அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

அறக்கட்டளை பணம்!

விசாரணை குறித்து வருமான வரித்துறையினர் கூறியதாவது:

அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கியுள்ள அறக் கட்டளையில் ரம்யா முக்கிய பொறுப்பில் உள்ளார். அதிலிருந்து வேறு கணக்குகளுக்கு பணப் பரிவர்த்தனை நடந்து உள்ளது. அது பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சில முக்கிய தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.எங்களது கேள்விகளுக்கு சில விளக்கங்களையும் அளித்துள்ளார். அது தொடர்பான ஆதாரங்களை கேட்டிருக்கிறோம்; அவரும் ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...