Tuesday, March 19, 2024
Home » நோர்வே எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கு நோபல்

நோர்வே எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கு நோபல்

by sachintha
October 6, 2023 5:55 am 0 comment

நடப்பாண்டில், இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு நோர்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் யோன் ஃபோஸ்ஸே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டொக்ஹோமில் உள்ள ரோயல் சுவீடன் அறிவியல் அகடமி, நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகளை அறிவித்து வருகிறது.

ஏற்கனவே, மருத்துவம், பெளதீகவியல், இரசாயனவியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று (05) இலக்கியத்துக்கான நோபல் பரிசு நோர்வே நாட்டைச் சேர்ந்த யோன் ஃபோஸ்ஸேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வே எழுத்தாளர் யோன் ஃபோஸ்ஸே எழுதிய புதிய நாடகம் மற்றும் உரைநடைக்காக, நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலக்கியத்துக்கான நோபல் பரிசில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர், சான்றிதழ் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.

ஃபோஸ்ஸேவின் பிரதான படைப்புகளில் ஒன்றாக 1989 ஆம் ஆண்டு அவர் எழுதிய “போதவுஸ்” என்ற நாவல் மற்றும் 1995–1996 ஆண்டில் வெளியான “மலன்சொலி” நவலின் இரு பாகங்களும் அடங்கும்.
1959 ஆம் ஆண்டு பிறந்த ஃபோஸ்ஸே 40க்கும் அதிகமான நாவல்கள், கட்டுரைகள், சிறுவர் புத்தகங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது படைப்புகள் உலகில் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இலக்கியத்திற்காக நோபல் பரிசை வழங்குவதில் தேர்வு செய்யப்படுவதற்கான பட்டியல்கள் இடம்பெறாதபோதும் சல்பான் ருஷ்டி, கான் ஷு, மார்க்ரேட் ஆட்வூட் மற்றும் ஹருகி முரகாமி ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் இருந்தமை குறிப்படத்தக்கது.

கடந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பிரான்ஸ் எழுத்தாளர் அன்னி ஏர்னொக் வென்றிருந்தார்.
இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் இரசாயனவிலுக்கான நோபல் பரிசு பெறுவோர் பெயர்களை ரோயல் சுவீடன் அறிவியல் அகடமி அறிவிக்கும் முன்னரே, அந்நாட்டு ஊடகங்களில் அப்பெயர்கள் வெளியாகின.

பெயர் அறிவிப்பில் கடைசி நேரம் வரை இரகசியம் காக்கப்படும் நிலையில், ஊடகங்களுக்கு தகவல் கசிந்தது துரதிருஷ்டவசமானது என்று அகடமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விடயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT