Monday, May 6, 2024
Home » ஐ.நா.வில் பலஸ்தீனுக்கு முழு அங்கத்துவம் வழங்கும் பிரேரணையை தவிடுபொடியாக்கிய வீட்டோ அதிகாரம்!

ஐ.நா.வில் பலஸ்தீனுக்கு முழு அங்கத்துவம் வழங்கும் பிரேரணையை தவிடுபொடியாக்கிய வீட்டோ அதிகாரம்!

by Gayan Abeykoon
April 24, 2024 9:14 am 0 comment

ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனுக்கு முழுமையான அங்கத்துவம் வழங்கும் நோக்கில் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கொண்டு வரப்பட்ட தீர்மானம் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தின் ஊடாக செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்நடவடிக்கை உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலஸ்தீன்_ – இஸ்ரேல் பிரச்சினையானது 8-_10 தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இப்பிரச்சினைக்கு இருநாட்டு தீர்வு மூலம் நிரந்தரத் தீர்வு காண்பதன் அவசியம் 1937 முதல் வலியுறுத்தப்படுகின்றது. அதிலும் குறிப்பாக கடந்த வருடம் ஒக்டோபர் முதல் காஸா மீது இஸ்ரேல் முன்னெடுக்கும் யுத்தம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்களும் சேதங்களும் மனிதாபிமான அவலங்களும் இந்த வலியுறுத்தலை உலகில் பேசுபொருளாக்கியுள்ளன. இந்நிலையில் பலஸ்தீன்-, இஸ்ரேல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதன் அவசியம் பரவலாக உணரப்பட்டிருப்பதோடு, இப்பிரச்சினைக்கு இருநாட்டு தீர்வே பிராந்தியத்தின் அமைதிக்கும் வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் 2023 நவம்பர் 15 ஆம் திகதியும், ஜி 20 நாடுகள் அமைப்பு 2023 நவம்பர் 22 ஆம் திகதியும், ஜி 7 நாடுகள் அமைப்பு 2023 டிசம்பர் 06 ஆம் திகதியும் பலஸ்தீன்_-இஸ்ரேல் பிரச்சினைக்கு தீர்வு காணவென இரு நாட்டு தீர்வை வலியுறுத்தும் அறிக்கைகளை விடுத்தன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இருநாட்டு தீர்வை வலியுறுத்தி பல சந்தர்ப்பங்களில் அறிக்கைகள் விடுத்தார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளரும், இராஜாங்க செயலாளரும் கூட இதனை வலியுறுத்தினர். அத்தோடு ஜேர்மனி, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் அதனை வலியுறுத்தியுள்ளன. ஸ்பெய்ன் எதிர்வரும் ஜுலையில் பலஸ்தீன இராச்சியத்தை அங்கீகரிப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. இத்தீர்வுத் திட்டத்திற்கு இஸ்ரேல் எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

இவ்வாறான பின்னணியில் 15 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பலஸ்தீனுக்கு முழு அங்கத்துவம் வழங்கும் பிரேரணை கடந்த 18 ஆம் திகதி (ஏப்ரல்) கொண்டுவரப்பட்டது. இத்தீர்மானத்திற்கு 12 நாடுகள் ஆதரவாக வாக்களித்த அதேநேரம், பிரித்தானியாவும் சுவிட்சர்லாந்தும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இச்சூழலில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்த நிலையில், அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை செல்லுபடியற்றதாக்கியுள்ளது. இதன் ஊடாக ஐ.நாவின் 194 நாடாகும் வாய்ப்பு பலஸ்தீனிடமிருந்து பறிக்கப்பட்டது. அத்தோடு பலஸ்தீனர்களின் பிரச்சினைகளும் அவலங்களும் தொடர்கதையாக இருக்க வழிவகுக்கப்பட்டிருக்கிறது. காஸா மீதான யுத்தம் ஆரம்பமாகி ஆறு மாதங்கள் கடந்துள்ளன. இதன் விளைவாக 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 90 சதவீமான மக்கள் இருப்பிடங்களை இழந்து கூடாரங்களிலும் முகாம்களிலும் தங்கியுள்ளனர். காஸாவின் கட்டடங்கள், வீடுகள் என 60 சதவீதமானவை அழிவுற்றுள்ளன.

இவ்வாறு அவலநிலை தொடர்ந்து கொண்டிருக்கையில் இப்பிரச்சினைக்கு இருநாட்டு தீர்வே பொருத்தமானது என்பதை உலகின் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் கரிபியன் தீவு நாடான பார்படோஸ் 140 ஆவது நாடாக பலஸ்தீன இராச்சியத்தை கடந்த 20 ஆம் திகதி அங்கீகரித்திருக்கிறது. இவ்வாறான நிலையில், அமெரிக்கா ஏன் இவ்வாறு செய்தது என்பதுதான் ஒவ்வொருவரையும் குடைந்தெடுக்கும் கேள்வியாகும்.

இருநாட்டுத் தீர்வு யோசனையானது 1937 இல் நியமித்த பீல் கமிஷன் அறிக்கை ஊடாக முன்வைக்கப்பட்டது. ஆனால் அப்போது அந்த யோசனையை எந்தநாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் 1982 இல் நடைபெற்ற அரபு உச்சிமாநாட்டில் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைமை 1937 இல் முன்வைக்கப்பட்ட இருநாட்டு தீர்வு யோசனையை ஏற்றுக்கொண்டது. அதன் பின்புலத்தில் 1993 இல் ஒஸ்லோ உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இவ்வாறு நீண்ட வரலாற்றை கொண்டுள்ள இருநாட்டு தீர்வு யோசனை மேலெழுந்துள்ள சூழலில், அல்ஜீரியா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த அங்கம் பலஸ்தீனுக்கு முழுமையான அங்கத்துவம் வழங்கும் பிரேரணைக்கு பலஸ்தீனை தனித்தனியாக அங்கீகரிக்காத பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் ஆதரவாக வாக்களித்தன, அத்தோடு பலஸ்தீனிய அரசை அங்கீகரித்துள்ள சியரா லியோன், ரஷ்யா, மொசாம்பிக், மால்டா, கயானா, ஈக்வடார், சீனா மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவளித்தன.

இவ்வாறு 12 நாடுகள் ஆதரவு அளித்த போதிலும் அமெரிக்கா தனித்து நின்று வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி பலஸ்தீனுக்கு ஐ.நாவில் நிரந்தர அங்கத்துவம் வழங்கும் தீர்மானத்தை தவிடுபொடியாக்கியது. இதேபோன்று காஸா யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி ஏற்கனவே கொண்டுவரப்பட்ட மூன்று தீர்மானங்களையும் கூட வீட்டோ அதிகாரத்தின் ஊடாக அமெரிக்கா செல்லுபடியற்றதாக்கியது தெரிந்ததே.

மர்லின் மரிக்கார்…

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT