Monday, May 6, 2024
Home » கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய நூல்களின் சங்கமம் திருவிழா

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய நூல்களின் சங்கமம் திருவிழா

by Gayan Abeykoon
April 24, 2024 9:14 am 0 comment

கடந்த 20 ஆம் திகதி சனிக்கிழமை கனடா நேரம் காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை கனடாவில் முதன்முறையாக ‘கனடா  தமிழ் எழுத்தாளர் இணையம் நூல்களின் சங்கமம்’ என்ற பெயரில் புத்தகத்திருவிழா ஒன்று ரொறன்ரோ நகரில் அமைந்துள்ள கனடா ஸ்ரீ இந்து ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பலராலும் வியந்து பாராட்டப்பட்டது.

அன்றைய தினம் 14 புதிய நூல்களும், ஒரு சஞ்சிகையும் ஒரே அரங்கில் வெளியிடப்பட்டன. 32 நூலாசிரியர்கள் தமது நூல்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்தார்கள். முப்பது ஆண்டு கால வரலாற்றுப் பின்னணி கொண்ட கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் விடுத்த வேண்டுகோளை ஏற்று அதிகளவில் நூலாசிரியர்கள் இணைந்து கொண்டனர். நிர்வாக சபை உறுப்பினர்களின் முயற்சியும் கிடைத்ததால் புத்தகத் திருவிழா சிறப்புற நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 35 இளையோர்கள் உரை, பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றிச் சிறப்புச் சேர்த்தனர். அதிகளவில் பார்வையாளர்கள் பங்குபற்றி நூல்களையும் பார்வையிட்டு நூல்களையும் வாங்கிச்சென்றனர்.

2023 டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி சமுக வலைத்தளங்கள் மூலம் இந்நிகழ்வு பற்றிய முதலாவது அறிவித்தலை இணையம் வெளியிட்டது. அன்றிலிருந்து நிகழ்வு நடைபெறும் வரை தொடர்ச்சியாக அறிவித்தல்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும், வானொலி, பத்திரிகைகள் மூலமும் வெளிவந்தன. இந்த அறிவித்தலைப் பார்வையிட்ட கனடா வாழ் எழுத்தாளர்கள் விருப்பத்துடன் முன்வந்து இணைந்து கொண்டார்கள்.

ஓர் இளம் பெண் எழுத்தாளர் தனது கன்னி முயற்சியாக ஒரு நூலை இந்த அரங்கில் வெளியிட்டார்.  ஆய்வுநூல்கள், கட்டுரைத் தொகுதிகள், நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் என பல்வகை நூல்களை கனடாவாழ் முன்னோடி எழுத்தாளர்கள் வெளியிட்டனர்.

இந்த நிகழ்வு தொடர்பான செய்தியை நந்தவனம் சஞ்சிகையில் தாமாகவே முன்வந்து பதிவு செய்தமைக்காக நந்தவனம் இதழின் முதன்மை ஆசிரியர் சந்திரசேகன் பலராலும் பாராட்டப்பட்டார்.

அகணி சுரேஸ்…

தலைவர்,  கனடா தமிழ்

எழுத்தாளர் இணையம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT