Monday, May 6, 2024
Home » இலங்கை நூலக சங்கத்தின் 18 ஆவது தேசிய ஆய்வு மாநாடு

இலங்கை நூலக சங்கத்தின் 18 ஆவது தேசிய ஆய்வு மாநாடு

by Gayan Abeykoon
April 24, 2024 8:12 am 0 comment

இலங்கை நூலக சங்கத்தின் 18 ஆவது தேசிய ஆய்வு மாநாடு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல்பீட கேட்போர் கூடத்தில், நூலக சங்க ஆய்வுக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகருமாகிய கலாநிதி முஹம்மட் மஜீட் மஸ்றூபா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இலங்கை நூலக சங்கம் 1024 அங்கத்தவர்களைக் கொண்ட, நூலகர்களுக்கான தொழில் முறை தராதரங்களைப் பேணுகின்ற, நூலகவியல் மற்றும் தகவல் விஞ்ஞானத்தில் கற்கைநெறிகளை நடத்துகின்ற ஒரு தொழில்சார் சங்கமாகும். இந்நிறுவனம் தனது வருடாந்த மாநாடுகளை தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் நடத்தி வருகின்றது. இம்முறை 18 வது தேசிய ஆய்வு மாநாடு ‘நூலகங்கள் மற்றும் சமூகத்தின் இணைப்பு: சமூக விரிவாக்கல் சேவைகள் மூலம் பிணைப்பினை வலுப்படுத்தல்’ எனும் தலைப்பின் கீழ் இடம்பெற்றது.

இவ்வருடம் வித்தியாசமான முறையில் இலங்கையின் தேசிய மொழிகளை முதன்மைப்படுத்தி மும்மொழிகளிலும் சிங்கள மொழி, தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழி மூலம் இந்த ஆய்வு மாநாடு நடத்தப்படுகின்றது. இலங்கை நூலக சங்கத்தின் தற்போதைய தலைவர் பிருத்தி லியனகே மற்றும் முன்னாள் தலைவர் கலாநிதி ஆனந்த திஸ்ஸ ஆகியோரின் நெறிப்படுத்தல்களில் ஆய்வு அமர்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், முதன்மை பேச்சாளராக பேராதனை பல்கலைக்கழக நூலகர் கலாநிதி ஆர். மகேஸ்வரன், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்  என். மணிவண்ணன், கிழக்கு பல்கலைக்கழக நூலகர் கலாநிதி டபிள்யூ.ஜெ. ஜெயராஜ், தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்பவியல் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினர். கிழக்கு பல்கலைக்கழக பிரதி நூலகர் எஸ். சாந்தரூபன் இணைத்தலைவராக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதன்மை அமர்வின் தலைமையினை கலாநிதி திருமதி கே. சந்திரசேகர் (யாழ் பல்கலைக்கழக பதில் நூலகர்) ஏற்றிருந்தார். மாநாட்டின் செயலாளராக யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் திருமதி ஜெனன், இணைச்செயலாளராக ஏ.எல்.எம். முஸ்தாக், கல்முனை பொதுநூலகர் அவர்களும் பங்கேற்றனர். இந்த ஆய்வு மாநாடு இரண்டு கட்ட அமர்வுகளாக இடம்பெற்றது. முதல் அமர்வு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட, தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றதுடன் இரண்டாவது அமர்வு எதிர்வரும் 26 ஆம் திகதி கம்பஹா பொதுநூலகத்தில் சிங்கள மொழி மூலம் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் பல்கலைக்கழக நூலகர்கள், பீடாதிபதிகள், நிருவாக உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள், செயலாளர்கள், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழில்சார் நூலக வல்லுனர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் நூலகவியலைக் கற்கின்ற மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

றிசாத் ஏ. காதர்…

(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT