Monday, May 6, 2024
Home » வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

- காலம் சென்ற கே.எச். நந்தசேனவின் இடத்திற்கு நியமனம்

by Rizwan Segu Mohideen
April 24, 2024 10:34 am 0 comment

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக வீரசேன கமகே இன்று (24) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அநுராதபுர மாவட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேன இறப்பெய்தியமையின் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்துக்கே வீரசேன கமகே இவ்வாறு நியமிக்கப்பட்டார்.

1945 இல் பிறந்த வீரசேன கமகே, கெக்கிராவ மத்திய மகா வித்தியாலயத்தில் தனது கல்வியை நிறைவு செய்துள்ளார். 1991 இல் அரசியல் நடவடிக்கைளை ஆரம்பித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கெக்கிராவ பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அவர் அதன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டுள்ளார்.

அதனையடுத்து, வட மத்திய மாகாண சபை தேர்தலில் மக்கள் முன்னணியில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட வீரசேன கமகே, அதிக தடவைகள் பதில் முதலமைச்சராக செயற்பட்டுள்ளார். அத்துடன், வட மத்திய மாகாண சபையில் தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் பதவியையும் வகித்துள்ளார்.

2020 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட வீரசேன கமகே, அனுராதபுர மாவட்டத்தில் 6 வது இடத்தில் தெரிவு செய்யப்பட்டார். கெக்கிராவ தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக செயற்பட்டுவரும் அவர் வட மத்திய மாகாணத்தில் இயந்திர உபகரண நிர்மாண நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

மாலனி சித்ரலதாவை மணந்த வீரசேன கமகே, ஐந்து மகன்கள் மற்றும் ஒரு மகளின் தந்தையாவார்.

நந்தசேனவின் பதவி வெற்றிடத்திற்கு வீரசேன கமகே நியமனம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT