Thursday, May 2, 2024
Home » நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் பூர்த்தியின்றி அழிவடைந்து வருவதாக பொதுமக்கள் கவலை
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வளாகத்தில்

நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் பூர்த்தியின்றி அழிவடைந்து வருவதாக பொதுமக்கள் கவலை

பல கோடி ரூபா வீண்விரயம்

by Gayan Abeykoon
April 19, 2024 5:20 am 0 comment

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பல்வேறு பிரிவுகளின் உபயோகத்திற்காக பல கோடி ரூபா செலவில்  நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் இடை நடுவில் கைவிடப்பட்டு அழிவடைந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள்  தெரிவித்தன.

நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஒப்பந்தக்காரர்கள் அதனை இடை நடுவில் கைவிட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அநுராதபுரம் வைத்தியசாலைக்கு முன்னால் 650 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவு  செய்யப்பட்டு  நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு  கட்டடம் தற்போது பெயர் பலகைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் தாதியர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட மாடிக்கட்டடம் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.

தாதியர் பயிற்சி பாடசாலை கட்டடம் தற்போது இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதுடன் புற்று நோயாளர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு  மாடி கட்டடத்தின் 1 ஆவது மாடி மட்டும் பாதி புனரமைக்கப்பட்டு பூர்த்தி செய்யப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் முன்னைய நாளே வைத்தியசாலைக்கு வந்து இலக்கப்படி தங்கக்கூடியவர்களாக காணக்கூடியதாகவுள்ளது.

கனிஷ்ட ஊழியர்களுக்காக 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்டடம் இடையில் கைவிடப்பட்டுள்ளது. போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு  நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் சிதைவடைந்து அதன் கம்பிகள் துண்டிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

பல்வேறு தூர  பிரதேசங்களில் இருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் அவர்களுக்கு இருப்பதற்கு இடமில்லையென்றும் சிகிச்சைக்காக வருபவர்கள் பல்வேறு இடங்களில் இரவில் தூங்கி வருவதாகவும் இலங்கை சுதந்திர சேவை சங்கத்தின் அமைப்பாளர் எஸ்.விஜேசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீரவிடம் தகவல் அறியும் சட்டத்தின்படி கிடைக்கப்பெற்ற தகவல்களின் மூலம் நான்கு கட்டடங்களின் தகவல்கள் மாத்திரம் அவரிடம் இருப்பதாகவும் ஏனைய கட்டடங்களின் நிதி மற்றும்  நிர்மாணப்பணி இடைநிறுத்தம் தொடர்பில் சுகாதார அமைச்சிடமே தகவல்களை பெற்றுகொள்ள முடியுமென  தெரிவித்தார்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT