Monday, April 29, 2024
Home » ஷங்ஹாய்-கொழும்பு சகோதர நகர உறவுகளை வலுப்படுத்த இணக்கம்
பிரதமர் தினேஷ் - ஷங்ஹாய் நகரபிதா சந்திப்பு

ஷங்ஹாய்-கொழும்பு சகோதர நகர உறவுகளை வலுப்படுத்த இணக்கம்

by sachintha
March 30, 2024 7:45 am 0 comment

சீனாவின் ஷாங்ஹாய் மற்றும் கொழும்பு சகோதர நகர உறவுகளில் வலுவான தொடர்பை ஏற்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (29) சீனாவின் ஷங்ஹாய் நகரில் ஷங்ஹாய் நகரபிதா கோங் செங்குடன் சந்தித்து நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன்போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது. உலகின் துறைமுக நகரங்களில் முதலிடம் வகிக்கும் சீனாவின் ஷங்ஹாய் நகருக்கும் எதிர்காலத்தில் கிழக்கு மற்றும் மேற்குக்கும் இடையே கப்பல் போக்குவரத்து மையமாக மாறத் திட்டமிடப்பட்டுள்ள கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை நகரங்களுக்குமிடையே வலுவான தொடர்பை ஏற்படுத்த இதன்போது இணக்கம் காணப்பட்டது.

கொழும்புக்கும் ஷங்ஹாய் நகரத்துக்கும் இடையிலான சகோதர நகர உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நீண்டகாலம் கடந்துள்ளதுடன், பிரசன்ன குணவர்தன நகரபிதாவாக இருந்த போது கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ் இன்னும் பாரிய பணிகளை மேற்கொள்ள முடியுமெனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஷங்ஹாய் நகரம் சரக்கு போக்குவரத்தில் 49.5 மில்லியன் கொள்கலன்களை கையாளும் பணிகளை பூர்த்தி செய்து கடந்த வருடம் சரக்கு போக்குவரத்தில் உலகில் முதலிடம் பெற்றுள்ளதுடன், அத்துறையிலிருந்து இலங்கை கற்கக்கூடிய பாடங்கள் ஏராளமென சுட்டிக்காட்டப்பட்டது.

4.72 டிரில்லியன் யுவான் வருடாந்த உற்பத்தி வருமானம் கொண்ட ஷங்ஹாய் நகரம், உலகத் தரம் வாய்ந்த வர்த்தக மையமாகவும் நிதி பரிவர்த்தனைகளுக்கான மையமாகவும் அடைந்துள்ள அனுபவங்களை இலங்கைக்கு வழங்குவதாக ஷாங்காய் நகரபிதா உறுதியளித்தார்.

25 மில்லியன் மக்களை கொண்ட ஷங்ஹாய் நகரின் திட்டமிடப்பட்ட நகர அபிவிருத்தியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தில் இருந்து இலங்கை கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் பாரியதென பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஷாங்காய் நகரபிதா அந்த ஒவ்வொரு துறையிலும் இலங்கைக்கு ஆதரவளிக்க தனது இணக்கத்தை வெளிப்படுத்தியதுடன், அந்தந்த துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை ஷங்ஹாய்க்கு வந்து அந்த துறைகளை ஆய்வு செய்ய அழைத்தார்.

பல யுனெஸ்கோ பாரம்பரிய தளங்களைக் கொண்ட இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான சீன மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதுடன், கொழும்பு மற்றும் ஷங்ஹாய் இடையிலான விமான சேவைகளை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் இணக்கம் காணப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT