Monday, May 13, 2024
Home » வீட்டுத் தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் பசுமைப் புரட்சி!

வீட்டுத் தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் பசுமைப் புரட்சி!

by Gayan Abeykoon
March 14, 2024 1:00 am 0 comment

வீட்டுத் தோட்டச் செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்ைகயில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது. மக்கள் ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளில் வீட்டுத் தோட்டச் செய்கையில் ஈடுபடுவார்களேயானால், அவர்கள் தங்களுக்கான காய்கறிகளை உற்பத்தி செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வாழ்க்ைகச் செலவை ஓரளவு ஈடுசெய்து கொள்வதற்கு முடியும். காய்கறி விலைகள் தற்காலத்தில் அதிகரித்திருப்பதனால் மக்கள் அதிக பணத்தை அதற்காகச் செலவிட வேண்டிய அவசியமும் இல்லை.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே வீட்டுத் தோட்டச் செய்கையை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றது. இத்திட்டத்தை வெற்றியுடன் முன்னெடுத்துச் செல்வதற்காக சில ஊக்குவிப்பு நடவடிக்ைககளையும் அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கின்றது.

இலங்கையில் மரக்கறி விலைகள் எப்போதும் சீராக இருப்பதில்லை. காலநிலை சீராக இருக்குமானால், மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைவது வழக்கம். ஆனால் கடும் வரட்சி மற்றும் தொடர்ச்சியான மழை வேளைகளில் மரக்கறிப் பயிர்கள் அழிவடைவதனால் காய்கறிகளின் விலைகள் உச்சத்துக்குச் சென்று விடுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் மக்களால் சமாளிக்க முடியாதவாறு காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்து விடுகின்றன.

கடந்த மாதமும் இவ்வாறுதான் இலங்கையில் மரக்கறிகளின் விலைகள் உச்சத்தைத் தொட்டன. ஒரு கிலோ கரட் இரண்டாயிரம் ரூபாவையும் தாண்டி விற்பனையாகியது. மலைநாட்டு மரக்கறிகள் மாத்திரமன்றி, ஏனைய பிரதேசங்களில் விளைகின்ற கத்தரி, புடோல், பாகற்காய், பயற்றங்காய் போன்ற பாரம்பரிய மரக்கறிகளின் விலைகளும் மிக அதிகமாகவே இருந்தன. மக்கள் பலர் மரக்கறிகளை வாங்குவதையே தவிர்த்துக் கொண்டனர்.

தற்போதுதான் காய்கறிகளின் விலைகள் சற்றுக் குறைவடைந்திருக்கின்றன. ஆனாலும் மரக்கறிகளின் உற்பத்தியானது முன்னைய நிலைமைக்கு இன்னுமே வந்துவிடவில்லை. மரக்கறிகளின் விலைகள் இனிமேல் முன்னைய நிலைமைக்கு வருவதற்கு வாய்ப்பே கிடையாதென்றுதான் காய்கறி விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

நாட்டில் காய்கறி உற்பத்தி வீழ்ச்சியடைவதற்கு சீரற்ற காலநிலை மாத்திரம் காரணமல்ல. காய்கறிச் செய்கை மீது மக்களுக்கு படிப்படியாக நாட்டம் குறைவடைந்து வருவதே இதற்கான பிரதான காரணமாகும். பயிர்ச்செய்கை என்பது முன்னரைப் போன்று இக்காலத்தில் சாதாரணமான தொழில் அல்ல. அன்றைய காலத்தில் காய்கறிச் செய்கையாளர்கள் அதிகளவு வருமானத்தைப் பெற்றனர். காய்கறிச் செய்கையில் சவால்கள் என்பது அக்காலத்தில் குறைவாகவே இருந்தன. பீடைத்தாக்கம், பசளைப் பாவனை, சந்தைப்படுத்தல் என்பன அக்காலத்தில் பெரும் சவாலாக இருக்கவில்லை.

ஆனால் இக்காலத்தில் பயிர்ச்செய்கையென்பது பெரும் சவால்கள் நிறைந்ததாகவே மாறிவிட்டது. பசளைகள், பீடைநாசினிகள் ஆகியவற்றின் விலையேற்றம், கூலித்தொழிலாளர்களுக்கான அதிகரித்த சம்பளம் உட்பட பெரும் பணத்தைச் செலவிட்டே மரக்கறிச் செய்கையில் ஈடுபட வேண்டியுள்ளது. மரக்கறிச் செய்கையாளர்கள் கடன்பட்டும், தமது தங்கநகைகளை அடகு வைத்துமே பயிர்ச்செய்கையில் ஈடுபட வேண்டியுள்ளது.

அவர்களுக்கு அமோகமான விளைச்சல் கிடைத்தாலும் கூட, அவற்றைச் சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்குகின்ற சிரமங்கள், பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. நகரங்களில் உள்ள சந்தைகளுக்கு நாம் செல்வோமானால், கூடுதல் விலை கொடுத்தே காய்கறிகளை வாங்க வேண்டியேற்படுகின்றது. ஆனால் மலைநாடு மற்றும் கிராமங்களிலுள்ள மரக்கறிச்செய்கையாளர்களிடமிருந்து மிகக்குறைவான விலைக்ேக காய்கறிகள் கொள்வனவு செய்யப்படுகின்றன. அக்காய்கறிகள் கொழும்பு போன்ற நகரங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மரக்கறிச் செய்கையாளர்களால் தங்களது உற்பத்திப் பொருட்களை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முடிவதில்லை. அவர்களது காலடி தேடி வருகின்ற வியாபாரிகள் மிகக்குறைந்த விலை கொடுத்தே காய்கறிகளை கொள்வனவு செய்து செல்கின்றனர். நிலத்தைப் பண்படுத்துவதில் ஆரம்பித்து அறுவடை செய்யும் வரை மரக்கறிச் செய்கையாளர்கள் எதிர்நோக்குகின்ற சிரமங்கள், செலவினங்கள் மிகவும் அதிகமாகும். ஆனாலும் அறுவடை முடிந்ததும் மிகக்குறைந்த விலைக்கே அவர்கள் தங்களது காய்கறிகளை காலடி தேடி வருகின்ற வியாபாரிகளுக்கு அவற்றை விற்கின்றனர்.

சந்தைப்படுத்தலில் உள்ள பலவீனமே இதற்குக் காரணமாகும். பாடுபட்டு உழைக்கின்ற மரக்கறிச் செய்கையாளர்கள் தொடர்ந்தும் வறுமையில் வாடுகின்றனர். ஆனால் அவர்களிடமிருந்து காய்கறிகளை கொள்வனவு செய்கின்ற வியாபாரிகளோ செல்வச்செழிப்பில் வாழ்கின்றனர். இந்த அநீதிக்கு முடிவு காணப்படுவது அவசியமாகும். அப்போதுதான் உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் பாதுகாக்கப்பட முடியும்.

மரக்கறிகள் மாத்திரமன்றி ஒட்டுமொத்த உணவு உற்பத்தியும் ஊக்குவிக்கப்பட வேண்டியது அவசியமாகும். கமக்காரர்கள் மாத்திரமன்றி சாதாரண மக்களும் மரக்கறிச் செய்கையில் ஈடுபடுவார்களானால் ஒவ்வொரு வீட்டிலும் பணவிரயத்தைப் பெருமளவில் குறைத்துக் கொள்ள முடியும். ஆகவே காய்கறிச் செய்கையை அரசாங்கம் ஊக்கவிப்பது சிறந்த திட்டமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT