Saturday, May 4, 2024
Home » பக்கவாட்டில் வளைந்த முள்ளந்தண்டு (Scoliosis) குறைபாட்டுவிழிப்புணர்வு நடைபவனி

பக்கவாட்டில் வளைந்த முள்ளந்தண்டு (Scoliosis) குறைபாட்டுவிழிப்புணர்வு நடைபவனி

- மார்ச் 02 சுதந்திர சதுக்கத்தில்

by Rizwan Segu Mohideen
February 29, 2024 7:53 pm 0 comment

பக்கவாட்டில் வளைந்த முள்ளந்தண்டு என்கிற ஸ்கொலியோசிஸ் (Scoliosis) குறைபாடு குறித்து அறிவூட்டும் நடைபவனியுடனான வேலைத்திட்டமொன்று மார்ச் 02 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லங்கா ஈ டொக் (Lanka E. Doc) மற்றும் அப்பலோ வைத்தியசாலைகள் குழுமம் (Apollo Hospitals Group-India) என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இத்திட்டம் குறித்து Lanka E Doc இன் பணிப்பாளரும் செரண்டிப் குழுமத்தின் தலைவியுமான டொக்டர் நிலுகா வெலிகல குறிப்பிடுகையில், இலங்கை போன்ற நாடொன்றில் முள்ளந்தண்டைப் பாதிக்கும் குறைபாடான பக்கவாட்டில் வளைந்த முள்ளந்தண்டு குறைபாட்டுத் தாக்கம் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக இது இளம்பெண் பிள்ளைகளுக்கு அதிகம் தாக்கம் மிக்கதாக உள்ளது.

“அப்ரோ-ஆசியாவின் மிகவும் மேம்பட்ட முள்ளந்தண்டு சிகிச்சைப் பிரிவான அப்பலோ முள்ளந்தண்டு சத்திர சிகிச்சை நிலையத்தின் தலைவர் டொக்டர் சஜன் கே ஹெக்டே, முள்ளந்தண்டு சத்திர சிகிச்சைக்கான சிரேஷ்ட மருத்துவ நிபுணர் டொக்டர் அப்பாஜி கிருஷ்ணன் மற்றும் டொக்டர் விக்னேஷ் ஆகியோரை உள்ளடக்கிய ஆசியாவில் மிகவும் சிறந்த மேம்பட்ட முள்ளந்தண்டு தொடர்பான சத்திர சிகிச்சைக்குழு எம்முடன் இணைந்துள்ளனர்.

அப்ரோ-ஆசியாவில் அதிக எண்ணிக்கையிலான முள்ளந்தண்டு மற்றும் பக்கவாட்டில் வளைந்த முள்ளந்தண்டு சத்திர சிகிச்சைகளை இப்பிரிவினர் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக ரோபோடிக் முள்ளந்தண்டு சத்திர சிகிச்சை, இணைவு குறைவான முள்ளந்தண்டு சத்திர சிகிச்சை போன்ற சத்திர சிகிச்சைகளுக்கு இது முன்னோடியாகத் திகழுகிறது.

லங்கா ஈ டொக் இனரான நாம் அப்பலோவின் முள்ளந்தண்டு சிகிச்சைப் பிரிவின் இலங்கை பங்காளரது ஒத்துழைப்புடன் எங்களது குழந்தைகள் இக்குறைபாட்டுக்கு உள்ளாவதை தவிர்த்தல் மற்றும் குணப்படுத்தல் குறித்த மருத்துவ ஒத்துழைப்பை உறுதிப்படுத்வென ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்கிறோம்.

போக்குவரத்து அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் அனுஷணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறிவூட்டும் நடைபவனியானது, சிறந்த பணிகளுக்கான அனைத்து தரப்பினரதும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும்.

இதனை வெற்றிகரமாக அறிவூட்டும் திட்டமாக்குவதற்காக நாம் ஊடகங்களின் ஒத்துழைப்புக்களை கோருகின்றோம் என்றும் டொக்டர் நிலுகா குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவூட்டும் நடைபவனி 02 ஆம் திகதி காலை 7.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து டொக்டர் சஜன் கே ஹெக்டேயினால் பக்கவாட்டில் வளைந்த முள்ளந்தண்டு குறைபாடு குறித்து அறிவூட்டப்படும். சுகாதார அமைச்சர், கல்வி அமைச்சர், சுகாதார இராஜாங்க அமைச்சர், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர், செரண்டிப் குழுமத்தின் தலைவி டொக்டர் நிலுகா வெலிகல, ஆசிய ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜெயசிங்க உள்ளிட்ட அதிதிகள் இந்த அறிவூட்டல் நடைபவனியில் கலந்துகொள்ள உள்ளனர். அத்தோடு அப்பலோ குழுமத்தின் சர்வதேசப் பிரிவு உப தலைவர் ஜிது ஜோஸ் உள்ளிட்டவர்களும் இதில் பங்குபற்றுவர்.

குருகுல, ஆனந்த, நாலந்த, யசோதரா தேவி, ரத்னாவலி பாலிகா, சென் ஜோசப் கல்லூரி ஆகிய பாடசாலைகளும் இந்த நடைபவனியில் கலந்துகொள்ள உள்ளன.

அப்பலோ வைத்தியசாலைகள் குழுமத்தின் தலைவர் டொக்டர் ஹரிபிரசாத் இது தொடர்பில் விடுத்துள்ள செய்தியில், டொக்டர் நிலுகா வெலிகல மற்றும் லங்கா ஈடொக் நிறுவனம் முன்னெடுக்கும் உன்னத நோக்கத்துடனான இப்பணிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். பக்கவாட்டில் வளைந்த முள்ளந்தண்டு (Scoliosis) குறித்த சந்தேகம் காணப்படும் குழந்தைகளின் பெற்றோர் WhatsApp +94743913395 Lanka edoc அல்லது [email protected] ஊடாக பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்ய கிளிக் செய்யவும் >>> qr1.be/CFVJ

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT