Monday, April 29, 2024
Home » பிரகாசமான எதிர்காலத்தை பிரதிபலிக்கும் இந்திய – இலங்கை எரிசக்தி கூட்டாண்மை

பிரகாசமான எதிர்காலத்தை பிரதிபலிக்கும் இந்திய – இலங்கை எரிசக்தி கூட்டாண்மை

by Rizwan Segu Mohideen
February 28, 2024 10:37 pm 0 comment

பூகோள ரீதியாக இலங்கையுடன் மிக நெருங்கிய நாடு இந்தியா. இலங்கை, இந்திய நாடுகளுக்கிடையிலான உறவு நீண்ட கால அரசியல், பொருளாதார, கலை, கலாசார, வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்டது.

சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவுடனான இந்த உறவு குறிப்பிடத்தக்க இணக்கத்தையும் நெருக்கத்தையும் கண்டுள்ளது. குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பில் இலங்கையுடன் இந்தியா மிக நெருக்கமான உறவைப் பேணி வருகிறது. கொவிட் 19 தொற்றின் போதும், அதற்கு பின்னரான பொருளாதார நெருக்கடி நிலையின் போதும் இந்தியா இலங்கைக்கு தனது நேசக்கரத்தை நீட்டியது. பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கு இலங்கைக்கு பல கோடி நிதியுதவியை வழங்கியது.

இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பின் முக்கிய துறைகளில் ஒன்றாக எரிசக்திதுறை அமைந்துள்ளது. இலங்கையின் எரிசக்தி உட்கட்டமைப்பில் இந்தியாவின் முதலீடுகள் இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் முக்கிய பங்காற்றும் என நம்பப்படுகிறது.

இலங்கையின் எரிசக்தி துறையில் இந்தியா கொண்டுள்ள ஆர்வம் பிராந்திய நட்பையும், பொருளாதார வளர்ச்சியையும் அடிப்படையாக கொண்டிருக்கிறது. எரிசக்தி துறையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதே உண்மையான இலக்கு என இந்தியா கூறுகிறது.

எரிசக்தி உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களை இலங்கை பெரிதும் நம்பியிருக்கிறது. புதைவடிவ எரிபொருளுக்கு மாற்றீடாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பக்கம் பல நாடுகள் வேகமாக நகர்ந்து வருகின்றன. பிராநதியத்தில் இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பக்கம் மிக வேகமாக நகரும் நாடாக மாறி இருக்கிறது.

சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பக்கம் இலங்கை திரும்ப வேண்டியதன் அவசியம் உணரப்படுகிறது. இலங்கையின் எரிசக்தி பிரச்சினைக்கு இது ஒரு தீர்வாக அமையும் என்றும் நம்பப்படுகிறது. என்ற போதிலும், இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீட்டை செய்வதற்கு நெருக்கடிகளும், இடையூறுகளும் அதிகம் இருக்கின்றன.

இந்த நிலையில், இலங்கையின் எரிசக்திதுறையை மேம்படுத்துவதற்கு இந்தியாவின் முதலீடு ஒரு தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலா காலமாக மின்சாரத்திற்காக நீரையும், புதை வடிவ எரிபொருளையும், நிலக்கரியையும் நம்பியிருக்கும் இலங்கையைப் போன்ற ஒரு நாடு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பக்கம் திரும்பி மாற்றத்தைக் காண்பது என்பது இலேசான காரியமல்ல. இந்திய முதலீட்டின் மூலம் எரிசக்திதுறையின் இலங்கை எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இலங்கையின் எரிசக்திதுறையில் இந்தியா வைத்துள்ள முதலீட்டுத் திட்டங்கள், புதிய ஆற்றல் சக்தியை நோக்கிய நகர்வில் ஓர் அத்தியாயத்தை தோற்றுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இந்தியா கொண்டுள்ள நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பத்தை இலங்கைக்கு இது வழங்கவிருக்கிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலான சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், சூழலுக்கு தீங்கு ஏற்படாத தூய்மையான எரிசக்தியைின் மூலம் இலங்கையில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க இந்தியாவின் இந்த திட்டம் வழி சமைக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலம், உலகை அச்சுறுத்தும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை தவிர்க்கவும், இயற்கை அனர்த்தங்களை தடுக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது.

வரலாற்று ரீதியாக, உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கையில் இந்தியா ஒரு முக்கிய முதலீட்டாளராக இருந்து வருகிறது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான மையப் புள்ளியாக எரிசக்தி துறை அமைந்திருக்கிறது.

அதானி கிரீன், எல்&டி, மற்றும் டாடா பவர் போன்ற இந்திய நிறுவனங்கள் இலங்கையின் எரிசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தங்கள் அறிவு, அனுபவம் மற்றும் வளங்களைக் கொண்டு செயலாற்றவுள்ளன.
இந்த இந்திய முதலீடுகள் இலங்கையில், நீர் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்கள் உள்ளிட்ட மின் திட்டங்களை மேம்படுத்துவதை நோக்காக கொண்டுள்ளதோடு, இலங்கையின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளை நிவர்த்தி செய்ய சிறந்த பங்களிப்பையும் வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் நிறுவனம், இலங்கையில் சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களை மேம்படுத்துவதற்கு சுமார் 750 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

பல நாடுகளைப் போலவே இலங்கையும் சுற்றுச்சூழலின் தாக்கத்தைக் குறைத்து, அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அதன் ஆற்றல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அதானி கிரீனின் கணிசமான முதலீடு, இந்த இலக்குகளை அடைவதிலும், நாட்டிற்கு மிகவும் நிலையான ஆற்றல் எதிர்காலத்தை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் அதிகரித்து வரும் இயற்கை எரிவாயு தேவையை கருத்தில் கொண்டு, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. . இலங்கையில் LNG டெர்மினல்கள் மற்றும் அது தொடர்புடைய வசதிகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரை, இந்தியாவின் முதலீடு அதன் எரிசக்தி ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதன் மூலமும், இறக்குமதி செய்யப்பட்ட புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலமும் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்த உதவுகிறது. உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படக்கூடிய இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு இது மிகவும் முக்கியமானது.

இலங்கையில் எரிசக்தி உள்கட்டமைப்பை மேம்பாடு செய்வதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படலாம் என்று நம்பப்படுவதுடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், தொழில்துறை வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உந்து சக்தி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இது, வறுமை ஒழிப்புக்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் எரிசக்தி துறையில் இந்தியாவின் முதலீடுகள், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் ஆழத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், பரஸ்பர பலம் மற்றும் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தியாவும் இலங்கையும் தொடர்ந்து நிலையான வளர்ச்சியையும், பிராந்திய ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்த உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-சூரியா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT